செய்தித்தாள் நிறுவனங்களுக்கு நெருக்கடி: உதவிகள் கிடைத்திட பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: செய்தித் தாள் நிறுவனங்களின் கோரிக்கைகளை தீர்க்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் அனுப்பினார்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று செய்தித் தாள் நிறுவனங்களுக்கான நிவாரணத் தேவைகள் குறித்து கடிதம் எழுதினார்.  அந்த கடிதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:  இத்தகைய நெருக்கடியான நேரங்களில்,  தக்க நேரத்தில் சரியான தகவல்கள் குடிமக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய அரசும் ஊடகங்களும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியமாகும். இதில் தவறு நேர்ந்தால் அது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை விளைவிப்பதோடு, அதுவும் தற்போதையச் சூழலில், இதுநாள் வரையிலான ஊரடங்கின் பயனையும் ஒன்றுமற்றதாக்கி விடக்கூடும்.
Advertising
Advertising

 கடந்த இரண்டு மாத காலமாக பொருளாதாரம் முடங்கியுள்ள சூழ்நிலையில், செய்தித்தாள் நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அதன் வாழ்வாதாரத்தையே கேள்விக்குரியதாக்கிவிட்டது. விளம்பர வருவாய் இழப்பு மற்றும் கோவிட்-19 தொற்று காரணமாக விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாகச் செலவினங்களை ஈடு செய்ய முடியாதது இந்தத் துறைக்குக் கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது.  தக்க உதவிகள் வழங்கப்படாவிடில், இத்துறையில் பணியாற்றும் 30 லட்சம் பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பது என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

ஊரடங்கு காலத்தில் பக்கங்களைக் குறைத்தல், பணியாளர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் பதிப்புகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் கூட, நிறுவனங்களின் பிரச்னைகளுக்கு இப்போது தீர்வு காணப்படாவிடில், செய்தித்தாள்கள் தொடர்ந்து செயல்பட மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாகிவிடும்.  பல்வேறு செய்தித்தாள் நிறுவனங்களின் தலைமையோடு நான் கலந்துரையாடி போது பல்வேறு பிரச்னைகள் முன் வைக்கப்பட்டன. அதனடிப்படையில்,  தங்களது உடனடி நடவடிக்கைக்காக கீழ்காணும் முக்கியப் பரிந்துரைகளை முன்வைக்கிறேன்.

*  செய்தித்தாள் நிறுவனங்களின் சேவை எவ்விதத் தடையுமின்றித் தொடர, அவர்களது நிதிச் சுமையைக் குறைக்கும் உடனடிச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

*  செய்தித்தாள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பிற மூலப்பொருட்களுக்கான சுங்க வரி ஆண்டு முழுவதும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

*  பல ஆண்டுகளாக பிஓசி கணிசமான தொகையை செய்தித்தாள் நிறுவனங்களுக்கு  நிலுவை வைத்துள்ளது. அவை உடனடியாக வழங்கப்பட்டால், சமூக விலகல் உள்ளிட்ட நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கப்படுவதால் உயர்ந்துள்ள செயல்முறைச் செலவுகளை ஈடுசெய்ய முடியும்.

* தனியாரிடம் இருந்து வரும் விளம்பர வருவாயில் ஏற்பட்டுள்ள இழப்பினை ஈடுசெய்ய, அவசியத் தகவல்களை வெளியிட பிஓசி-யால் வழங்கப்படும் விளம்பரக் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்.

*  அதேசமயம், நமது செய்தித்தாள் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் அரசின் அறிவிப்புகளை வெளியிட அச்சு ஊடகங்களின் பயன்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

 இப்பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு,  நெருக்கடியான இச்சமயத்தில், செய்தித்தாள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்குச் சரியான நேரத்தில் உதவிகள் கிடைத்திடும் என்னும் நம்பிக்கையில் தங்களின் கவனத்திற்கு  கொண்டு வருகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்

திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், 15வது நிதிக்குழுவின் இன்றைய கூட்டத்தில் வரிகளை முறையாக பகிர்ந்தளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நிதி நெருக்கடியை தவிர்க்க, மாநிலங்களின் தற்போதைய வரி பங்கான 41%லிருந்து கணிசமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: