திருவாடானை அருகே ஆஸ்திரேலியா கடத்த முயற்சி: 5 கோடி மதிப்பு தங்க பிஸ்கட் ஹெராயினுடன் 9 பேர் கைது

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்பி வருண்குமாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தொண்டி அருகே வீரசங்கிலி மடத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து திருவாடானை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதில் செம்மரம், போதைப்பொருள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில்  தொடர்புடைய, திருவாடானை அருகே சோழியக்குடியைச் சேர்ந்த அப்துல் வகாப், கருமொழியை சேர்ந்த முத்துராஜா, வீரசங்கிலி மடத்தைச் சேர்ந்த அஜ்மீர்கான், தொண்டியை சேர்ந்த அபுல்கலாம் ஆசாத்,  சுரேஷ்குமார், சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த அப்துல்ரஹீம்,

அஜ்மல்கான், சூரணத்தை சேர்ந்த அருள்தாஸ், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை சேர்ந்த கேசவன் ஆகிய 9 பேரை தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள ஹெராயின், தங்க பிஸ்கட், செல்போன்கள் 21 மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து எஸ்.பி. வருண்குமார் கூறுகையில், இந்த கும்பல் போதைப் பொருட்களை தொண்டி பகுதியிலிருந்து படகு மூலம் இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்தனர். இதில் தொடர்புடையவர்கள் வட மாநில குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றார்.

Related Stories:

>