கொழுந்தனை குடிக்க வைத்ததை தட்டிக்கேட்ட பெண் வீட்டின் மீது போதையில்கையெறி குண்டு வீசிய உறவினர்: வெடிக்காத குண்டை கடித்த நாய் பலி

அலங்காநல்லூர்:  கொழுந்தனை குடிக்க வைத்ததை தட்டிக் கேட்ட பெண்ணின் வீட்டின் மீது, போதையில் கையெறி குண்டுகளை உறவினர் வீசியது பாலமேடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிக்காத குண்டை கடித்த நாய் பலியானது.   மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி செல்வராணி. சசிகுமாரின் உறவினர் சின்னத்துரை(30), தனியாக வசித்து வருகிறார். அடிக்கடி குடித்து விட்டு போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவர், சசிகுமாரின் தம்பிக்கு மது வாங்கி கொடுத்து குடிக்க வைத்துள்ளார். இதை தட்டிக்கேட்ட செல்வராணி, கொழுந்தனை குடிக்க வைத்து கெடுப்பதாகக் கூறி, சின்னத்துரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் வைத்திருந்த 4 கையெறி குண்டுகளை சசிக்குமார் வீட்டின் மீது, நேற்று முன்தினம் இரவு வீசி விட்டு தப்பினார். இதில் ஒன்று மட்டும் வெடித்த நிலையில், மீதி குண்டுகள் வெடிக்காமல் அங்கே கிடந்திருக்கிறது. அதில் ஒன்றை வீட்டில் வளர்க்கும் நாய் வாயில் கவ்வி எடுத்துள்ளது. பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்ததில், நாய் தலை சிதறி அதே இடத்தில் பலியானது. இது குறித்து பாலமேடு போலீசார் வழக்குப்பதிந்து, சின்னத்துரையை தேடி வருகின்றனர். வெடிக்காமல் கிடந்த கையெறி குண்டுகள் மற்றும் வெடிமருந்து சிதறல்களை வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சேகரித்து அழித்தனர்.

வனவிலங்கு வேட்டைக்கு தயாரித்து வைத்திருந்த கையெறி குண்டையே, சின்னத்துரை, ஆத்திரத்தில் செல்வராணி வீட்டில் வீசியது தெரிந்தது. இதன்பேரில் சின்னத்துரை வீட்டில் வேறு குண்டுகள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்து பாலமேடு போலீசார் சோதனை நடத்தினர்.

Related Stories:

>