திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறைகேடு: பேரூராட்சி செயலர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

தாம்பரம்: சென்னை சிட்லபாக்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் தினமும் 7 டன் குப்பை சேகரமாகின்றன. இதனை சேகரிக்கும் பணியில் பேரூராட்சி சார்பில் 36 ஊழியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 100 பேரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒரு நபருக்கு 6 ஆயிரம் வீதம் மாத சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், 8 ஆயிரம் வீதம் வழங்கியதாக ஊழியர்களிடம் ஒப்பந்த நிறுவனம் கையெழுத்து வாங்குவதாகவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும் புகார் எழுந்தது.குறிப்பாக 7 குப்பை வாகனங்களில் 3 மட்டுமே சரியாக உள்ளன.

மற்றவை பழுதடைந்துள்ளன. ஆனால், பழுதான வாகனங்களை சீரமைத்ததாக கணக்கு காண்பித்தது, தூய்மை பணியாளர்களுக்கு சோப்பு, செருப்பு, சீருடை போன்றவை வழங்காமல், வழங்கியதாக கணக்கு காட்டியது, தனியார் மூலம் குப்பை அகற்றப்படுவதில் ஆட்களை அதிகம் காட்டி பணி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில், பேரூராட்சி இயக்குநர் மற்றும் பேரூராட்சிகளின் ஆய்வு அலுவலர் சிட்லபாக்கம் பேரூராட்சியில் கடந்த சில நாட்களாக இங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அதில், பேரூராட்சி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிளார்க் ரவிச்சந்திரன், மேஸ்திரி நரசிம்மன் ஆகியோர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ரேஷன் கடை ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சி திருமலை நகரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் கோடீஸ்வரி (38). இவர், அரசின் கொரோனா நிவாரண நிதி ஆயிரம் ரூபாயில் 300 ரூபாய்க்கு மளிகை பொருட்கள் வாங்கும்படி பொதுமக்களை கட்டாயப்படுத்தியதாக காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வில், கடை ஊழியர் கோடீஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்தனர். இதேபோல், மாடம்பாக்கம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள ரேஷன் கடையில் பணிபுரியும் தணிகாசலம் என்பவர் வெளி மார்கெட்டில் இருந்து பொருட்களை வாங்கி, ரேஷன் கடையில் விற்பனை செய்ததும் அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து அவரையும் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்தனர்.

Related Stories: