திருமண தகவல் மையம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் விபரீதம்: இளம்பெண்ணை அறையில் அடைத்து 6 லட்சம் கேட்டு அடித்து சித்ரவதை:

*  தனியார் நிறுவன உரிமையாளர் உட்பட 3 பேரிடம் விசாரணை

சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யா நாராயணபுரத்தை சேர்ந்தவர் பிரியங்கா (29). இவருக்கு, கடந்த 2019ம் ஆண்டு கிறிஸ்டியன் மேட்ரிமோனி மூலம் சென்னை தி.நகர் நியூ கிரி சாலையை சேர்ந்த ஜோ என்பவர் பழக்கமானார். இது, நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்தனர். அப்போது, ஜோ, தான் நடத்தும் நிறுவனத்தில் வேலைக்கு வருமாறு பிரியங்காவை அழைத்துள்ளார். அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்த பிரியங்கா, ஜோ நடத்தும் நிறுவனத்திலேயே தங்கி  வேலை செய்து வந்தார். அப்போது, ஜோ தனது நிறுவனம் சந்தித்து வரும் இழப்பை ஈடுகட்ட ரூ.6 லட்சம் வேண்டும் என பிரியங்காவிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர், அவ்வளவு பணத்திற்கு நான் என்ன செய்வேன், என தெரிவித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனிடையே, கடந்த மார்ச் 24ம் தேதி ஊரங்கு பிறப்பிக்கப்பட்டதால், பிரியங்காவால் சொந்த ஊர் செல்ல முடியாமல், ஜோவின் நிறுவனத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, அந்நிறுவனத்தில் வேலை செய்யும் சமந்தா, சாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து பிரியங்காவை செல்போனில் யாரிடமும் பேசகூடாது என்று கூறி அடித்தும், உணவு கொடுக்காமலும் இருந்து வந்தனர். இதுகுறித்து காதலன் ஜோவிடம் கேட்டபோது, நிறுவனத்தில் ஏற்பட்ட இழப்பு ரூ.6 லட்சத்தை கொடுத்தால் தான் உன்னை விடுவிக்க முடியும், என்று கூறினார்.

இதற்கிடையே பிரியங்காவின் பெற்றோர், மகளிடம் இருந்து எந்த தகவலும் வராததால், சென்னையில் வசித்து வரும் அவர்களின் உறவினர் ஒருவரை தொடர்புகொண்டு, பிரியங்கா வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று விசாரிக்கும் படி கூறினர். அதன்படி அவரது உறவினர், பிரியங்கா வேலை செய்த நிறுவனத்திற்கு வந்து பிரியங்காவை மீட்டுள்ளார்.  பின்னர் ஜோ மற்றும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் 2 நபர்கள் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் அளித்துள்ளார்.  அதன்பேரில், ஜோ  மற்றும் ஊழியர்கள் உட்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>