பேரழிவின் போது அரசியல் தேவையா?; தொழிலாளர்களுக்கு அனுப்பிய வாகனங்களில் எந்த ஆவணமும் இல்லை...பிரியங்கா காந்தியை விமர்சித்த காங். பெண் எம்எல்ஏ

லக்னோ: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை கட்சியின் பெண் எம்எல்ஏ கடுமையாக விமர்சித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பல லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இவர்கள் சிறப்பு ரயில்கள்,  பஸ்கள், லாரி, வேன், கன்டெய்னர் லாரிகள் என பல்வேறு வகைகளில் சொந்த ஊர்  திரும்பி வருகின்றனர். இவற்றில் இடம் கிடைக்காத அல்லது பணம் இல்லாதவர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கின்றனர். இவர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

மேலும், இவர்கள் தண்டவாளங்கள், சாலைகளில் நடந்து  செல்லும்போதும், வாகனங்களில் செல்லும்போதும் விபத்துகள் ஏற்பட்டு, இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில்  சிக்கியுள்ள பல்வேறு மாநில தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு  அழைத்துச் செல்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின்  உத்தரவுப்படி, ஆயிரம் தனியார் பேருந்துகளை இயக்க காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. ஆனால், இதற்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிப்பதில் பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் இம்மாநில அரசுக்கும், காங்கிரசுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பஸ்கள் விவகாரத்தில், காங்கிரஸ் தலைமையை அக்கட்சியின் ரேபரேலி தொகுதி எம்.எல்.ஏ.அதிதி சிங் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அதிதி சிங், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் அனுப்பிய பஸ்களில் பெரும்பாலானவை சிறிய வாகனங்கள். அனுப்பப்பட்ட ஆயிரம் பஸ்களின் பட்டியலில், பாதிக்கும் மேற்பட்டவை போலியானவை. 297 குப்பை பஸ்கள், 98 ஆட்டோ ரிக் ஷாக்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், 68 வாகனங்களுக்கு எந்த ஆவணங்களும் இல்லை.

இது ஒரு கொடூரமான நகைச்சுவை. ஒரு பேரழிவின் போது, இதுபோன்ற சிறுபிள்ளைதனமான அரசியல் தேவை தானா? பஸ்கள் இருந்தால், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவிற்கு ஏன் அனுப்பவில்லை? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், ராஜஸ்தானின் கோட்டா நகரில், ஆயிரக்கணக்கான உ.பி., மாணவர்கள் சிக்கி தவித்த போது, அங்கு ஏன் பஸ்களை அனுப்பவில்லை. காங்கிரஸ் அரசால், அவர்களை தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை. எல்லையில் கூட அவர்களால் விட முடியவில்லை. யோகி ஆதித்யநாத்தின் முயற்சியால் அவர்கள் உ.பி., அழைத்து வரப்பட்டனர். இதனை ராஜஸ்தான் முதல்வரும் பாராட்டினார் என்றார். சொந்த கட்சி தலைமையை கட்சி எம்எல்ஏ விமர்சனம் செய்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>