லிப்ட் கொடுப்பது போல் நடித்து அரசு அதிகாரியிடம் 40 ஆயிரம் பறிப்பு

* கையில் 2 ஆயிரம் கொடுத்து ஓட்டம்

* பைக்கில் தப்பிய ஆசாமிக்கு வலை

சென்னை:  லிப்ட் கொடுப்பது போல் நடித்து மத்திய அரசு அதிகாரியிடம் ₹40 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு செலவுக்கு 2 ஆயிரம் பணம் கொடுத்து சென்ற பைக் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். தி.நகரை சேர்ந்தவர் சிவராமன் (54). இவர், மத்திய அரசு நிறுவனமான ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இவரது மகன்கள் இரண்டு பேரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இதனால் சிவராமன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், செலவுக்கு பணம் இல்லாததால் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள பனகல் பார்க் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் 40 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் லிப்ட் கொடுப்பது போல் சிவராமனை தனது பைக்கில் அழைத்து சென்றார். சிறிது தொலைவு சென்றதும், மக்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்ம நபர், சிவராமனை மிரட்டி அவர் வைத்திருந்த 40 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு, செலவுக்கு 2 ஆயிரம் கையில் வைத்துக்கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 இதை சற்றும் எதிர்பார்க்காத சிவராமன் செய்வது தெரியாமல் தவித்தார். இதுகுறித்து, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக் ஆசாமியை தேடி வருகின்றனர்.

Related Stories: