×

தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை 50% உயர்த்தும் கோரிக்கையை தமிழகஅரசு நிராகரிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்த கோரிக்கை வைத்திருப்பது நியாயமல்ல என்றும், அதை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்றும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.    தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  தனியார் பள்ளி, கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை கேட்டு நிர்பந்திக்கக் கூடாது என  தமிழக அரசு  எச்சரிக்கை விடுத்தது. அந்தவகையில் பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புக்கு ஏற்ப செயல்பட வேண்டியது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

 எனவே, தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் கல்விக் கட்டணத்தை வசூல் செய்வது குறித்தும், உயர்த்துவது குறித்தும் நினைப்பதே ஏற்புடையதல்ல. அதுமட்டுமல்ல, பொருளாதார பாதிப்பை ஓரளவுக்கு தாங்கிக் கொள்ள தனியார் பள்ளிகளும் முன்வர வேண்டும்.  அதை விடுத்து தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக் மற்றும்  சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது நியாயமில்லை.

ஏனென்றால், பெற்றோர்கள் குடும்பம் நடத்துவதற்கே சிரமப்படுகின்ற போது எப்படி கட்டணத்தை உயர்த்தி கட்ட முடியும். எனவே தனியார் பள்ளிகளின் நிர்வாகங்கள் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை உயர்த்தக் கூடாது. மேலும் தமிழக அரசும், தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டண உயர்வு சம்பந்தமான கோரிக்கையை நிராகரித்து உடனடி அறிவிப்பை வெளியிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : government ,Tamil Nadu ,schools ,GK Vasan Tamil Nadu , Tuition for private schools, Government of Tamil Nadu, GK Vasan
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...