கல்வி முக்கியம்தான், அதைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் கொரோனா தொற்று குறைந்த பிறகுதான் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட வேண்டும்

* அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த பிறகுதான் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் பள்ளி கல்வி மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து பேசியதுடன், கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்கள் தள்ளி, ஜூன் 15 தொடங்கி 25ம் தேதி வரை நடத்தப்போவதாக அரசு அறிவித்து புதிய தேர்வு அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

உயர் கல்வித்துறை தேர்வுகள் ஜூலையில் நடைபெறும் என அறிவிக்கும்போது 10ம் வகுப்பு தேர்வுக்கு மட்டும் ஏன் இத்தனை அவசரம்.   பல பள்ளி வளாகங்கள் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான இருப்பிடங்களாக மாற்றப்பட்டுள்ள சூழலில் அங்கே மாணவர்களை தேர்வு எழுதச் செய்வது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும். கட்டுப்பாட்டு மண்டலத்திலுள்ள மாணவர்களின் நிலை என்ன? அங்கே எப்படி தேர்வு எழுத முடியும். நோய் தொற்றின் அபாயத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு பள்ளிகள் திறந்த பின்னர் அவகாசம் அளித்து மாணவர்கள் தங்கள் பாடங்களை நல்ல முறையில் திருப்புதல் செய்வதற்கு வாய்ப்பளித்த பின்னரே 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் தலைமை செயலக வளாகத்தில் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தொற்று தமிழகத்தில் குறைந்த பிறகுதான் 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட வேண்டும். மற்ற மாநிலங்களில் குறிப்பாக கேரளாவில் தேர்வு நடத்துவதாக அமைச்சர் கூறினார். அங்கு நோய் தொற்று குறைவாக உள்ளது. அங்கு ஒரே நாளில் 10 பேருக்கு தான் நோய் தொற்று ஏற்படுகிறது. தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று அதிகளவில் உள்ளது. இதுபற்றி அமைச்சரிடம் எடுத்துக் கூறினேன்.

அவரும் புரிந்து கொண்டார். 2, 3 நாளில் அறிக்கை வெளியிடுவதாக கூறினார்.

திமுக இளைஞர் அணி நடத்தும் கூட்டங்கள், வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட கூட்டங்களின் போடப்பட்ட தீர்மானம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். எங்கள் கோரிக்கையை பரிசீலித்து நல்ல முடிவை அறிவிப்பதாக உறுதி அளித்துள்ளார். கல்வி முக்கியம்தான், இதைவிட மாணவர்களின் உயிர் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் விடுபட்டு சகஜநிலை திரும்பிய பிறகு தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, ஆர்.டி.சேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>