சலுகைகள் எதுவும் அறிவிக்கவில்லை வாழ்வதற்கே போராடும் நிறுவனங்கள் வாகன துறையை கைகழுவியதா அரசு?

புதுடெல்லி: கடும் வீழ்ச்சியை அடைந்து வரும் ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க மத்திய அரசு எந்த நேரடி சலுகையும் அறிவிக்காததால், வாகன நிறுவனங்கள் அதிருப்தியும், கவலையும் அடைந்துள்ளன.   பொருளாதாரத்தை மீட்கவும், தொழில்துறைகள் மேம்படவும் 21 லட்சம் கோடி சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுகுறித்து இந்திய வாகன உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜன் வதேரா கூறியதாவது:  வாகனத்துறையை மீட்க உதவக்கோரி, மத்திய அரசுடன் பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த துறைக்கு நேரடியாக எந்த சலுகையும் இடம்பெறவில்லை.

 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருக்கு சலுகை வழங்கியதை வரவேற்கிறோம். விவசாய துறைக்கு வழங்கிய சலுகையால் ஆட்டோமொபைல் துறைக்கு ஓரளவு மறைமுக பலன் கிடைக்கும். இருப்பினும், இது இப்போதைக்கு நிகழ வாய்ப்பில்லை. உடனடியாக, சந்தையில் தேவையை அதிகரிக்கவும், ஆட்டோமொபைல் துறை நேரடியாக பலன் பெறவும் சலுகைகள் அறிவிக்க வேண்டும்.   ஆட்டோமொபைல் உற்பத்தி துறையால் நேரடியாக 3.7 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆண்டுதோறும் ஜிஎஸ்டி வசூலில் 15 சதவீதம். அதாவது, 1.5 லட்சம் கோடி இந்த துறையால் அரசுக்கு கிடைக்கிறது.

 இந்த துறை மீள உடனடி உதவிகளை அரசு வழங்க வேண்டும். இதுபோல், டீலர்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நேரடி பலன் வழங்கினால்தான் வீழ்ச்சியில் இருந்து மீள முடியும்; வேலையிழப்பை தடுக்க முடியும் என்றார். இதற்கிடையில், 6வது கட்டமாக, ஊக்க சலுகைகள் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: