எப்படி இருக்கிறார் நடிகை ரஞ்சனி?

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சனி தொடர்ந்து ‘நீதானா அந்தக் குயில்’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘மண்ணுக்குள் வைரம்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். வெற்றிகரமாக வலம் வந்த ரஞ்சனி இப்போது எப்படி இருக்கிறார்?

ரஞ்சனிக்கு  திருமணமாகி கேரளாவில் வசிக்கிறார். தனக்கென்று ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். முகநூலில் அவ்வப்போது தனது கருத்து களை எழுதுகிறார். பெண்களுக்கு எதிரான கருத்துகள் வரும்போதெல்லாம் ரஞ்சனியின் குரல் ஒலிக்காமல் இருந்ததில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா மரணம் முதல் சசிகலா முதல்வராவதற்கான முயற்சிகள் வரை அரசியல் மாற்றங்களின் போதும் தயங்காமல் குரல் கொடுத்தவர்.

கேரள நடிகர் சங்கத்தின் தலைவரும், எம்.பி.யுமான இன்னொசென்ட் மலையாளத் திரைப்பட உலகம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலேயே உள்ளது என்று சொன்ன போது மலையாள நடிகைகள் கொதித்தெழுந்தனர். அப்போது ரஞ்சனி இன்னொசென்டின் அறிவிப்பை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். “நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். கேரள நடிகைகள் தங்களது பிரச்னைகளைச் சொல்ல அமைப்பு இருக்க வேண்டும். புகார் அளிக்கும் போது அவர்கள் ரகசியமாக விசாரிக்கப்படுவதுடன் புகார் சொல்லும் நடிகைக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனவும் கூறியிருந்தார்.

சிங்கப்பூரை சேர்ந்த ரஞ்சனி திரைப்படங்களில் நடிக்க வந்தது சுவாரஸ்யமான கதை. 1987ல் துவங்கி  5 ஆண்டுகள் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் அழுத்தமான ரோல்களில் முகம் காட்டினார். தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகளை அம்மா, அண்ணா என்று உறவு சொல்லி அழைப்பவர். இன்றளவும் அவர்களின் பிறந்த நாளில் பழைய நினைவுகளையும், வாழ்த்துகளையும் முகநூலில் பகிரும் ரஞ்சனி ஒரு வழக்கறிஞரும் கூட. லண்டனில் தனது சட்டப்படிப்பை முடித்த அவர் கேரளாவில் வழக்கறிஞராகவும் வலம் வந்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். ‘அந்த  நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்’ பாடல் வழியாக தன் ரசிகர்களை அழகால் கட்டிப்போட்டவர். மலையாளப் பட உலகில் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘சித்ரம்’(1988) ரஞ்சனிக்கு பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாக அமைந்தது. மலையாளப் பட உலகில் மோக‌ன்லால், ரஞ்சனி பொருத்தமான ஜோடியாக கொண்டாடப்

பட்டு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளனர்.

சினிமாவில் பரபரப்பாக இருந்த‌போதே நடிப்பை விட்டு விட்டு சிங்கப்பூர் சென்றார். இவர் கடைசியாக நடித்தது ‘கஸ்டம் டைரி’ என்ற படம் (1993). 56 படங்களில் நடித்துள்ளார். லண்டனில் ஃபினான்சியல்  மேலாண்மைப் படிப்பை முடித்தார், பின் அங்கேயே வழக்கறிஞர் பட்டப்படிப்பையும் முடித்தார். பி.பி.சி.க்காகவும் கொஞ்ச காலம் வேலை பார்த்துள்ளார். 2006ல் பிசினஸ்மேன் பியர் கொம்பாராவை திருமணம் செய்து கொண்டு கேரளாவில் செட்டிலாகி விட்டார். அதன் பின்னரும் தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. கேரள டிவி சேனல்களில் பெண்களுக்கான திறன் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலக்கினார்.

2017ல் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில்  இல்லத் தரசிகள் திறமைகளை வெளிப்படுத்த தளம் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் இன்றளவும் ரஞ்சனியோடு தொடர்பில் உள்ளனர். முன்னேறத் துடிக்கும் பெண்களின் முன்மாதிரியாக‌ இருப்பதோடு அவர்களுக்கு உதவவும் தயங்காதவர். நடிக்கும் வாய்ப்புகளை விட தனது பிசினசில் அதிக கவனம் செலுத்தும் இவர் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு “இன்ஃபர்மேஷன் சென்டர் ஃபார் கேம்பஸ் அப்ராட்” என்ற நிறுவனத்தை கேரளாவில் நடத்தி வருகிறார். அவரை  தொடர்பு கொண்டு ‘தோழிக்காக’ பேசவேண்டும் என்றபோது உற்சாகமாக ஒப்புக்கொண்டார்.

கேரளாவில் நடிகை பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான போது கேரள நடிகர், நடிகைகள் பெரும் குரல் எழுப்பினர். கேரள நடிகைகள் பாதுகாப்புக்கு என்று ஏதாவது ஏற்பாடுகள் நடந்துள்ளதா?

அப்படி எதுவும் இது வரை நடந்ததா எனக்குத் தெரியல. எல்லாரும் அமைதியா இருக்காங்க. பிரச்னை வரும் போது தான் எல்லாரும் பேசுறாங்க. பப்ளிசிட்டிக்காக பேசுறாங்க. இது மாதிரி பெரிய பிரச்னைகளுக்காக போராடுறப்போ  அவங்களுக்குள்ள ஈகோவை வளர்த்துக்கக் கூடாது. இங்க ஈகோதான் பெரிய பிரச்னையாக இருக்கு. பெண்களுக்கு எதிரான பிரச்னைகளைத் தடுக்க  தேவை டீம் எஃபோர்ட். நாம வலிமையா இருக்கணும். இந்த ஈகோவால போராட நினைக்கிறவங்களும் விட்டுட்டுப் போய்டறாங்க.

உங்களோட சமூக  செயல்பாடுகள்?

நான் லண்டன்ல முடிச்சது கார்ப்பரேட் லா. டொமஸ்டிக் வயலென்ஸ் தொடர்பான கேஸ் எடுத்துப் பண்ணினேன். அதை லண்டன்லயே சோஷியல் வொர்க்கா என்னோட விருப்பத்துக்காகப் பண்ணினேன். பெண்கள், குழந்தைகள் பிரச்னைல  சட்டம் தொடர்பான விழிப்புணர்வை கேரளாவில்

செய்துட்டிருக்கேன்.

உங்க கணவர் பற்றி சொல்லுங்கள்?

அவர் பெயர் பியர் கொம்பாரா, ஒரே பிசினஸில் இருக்கோம். ரெண்டு பேருக்குமே வைல்ட் லைஃப் பிடிக்கும். இதுக்காக நிறைய டிராவல் பண்ணுவோம்.  அவரோட ஹாபி வைல்ட் லைஃப்  போட்டோகிராபி. கடந்த  2 வருஷமா நிறைய எடுத்திருக்கார். வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்காக நாங்க வட மாநிலங்கள்ல  ஒரு மாசம் தொடர்ந்து டிராவல் பண்ணினோம். வனங்களுக்குப் போற ஆட்கள் அங்க இருக்கும் வன விலங்குகளை மதிக்கிறதில்லை. கல்லெடுத்து அடிக்கிறதும், கத்துறதுமா விலங்குகள தொந்தரவு பண்றாங்க. விலங்குகள் நம்மைத் தாக்காது.

விலங்குகள மதிக்கணும். தொந்தரவு பண்ணக்கூடாது. விலங்குகள் அதோட  எடத்துல வாழ விடனும். அவரோட வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்காக பயணித்த  நாட்கள் மறக்க முடியாதவை. மணிக்கணக்கில் காத்திருந்து அபூர்வமான விலங்குகளைப் பார்த்திருக்கேன். எப்ப அவர் வைல்ட் லைஃப் போட்டோகிராபிக்காக கிளம்பினாலும் நானும் ரெடியா இருப்பேன். அவர் என்னோட பெஸ்ட் ஃபிரண்டும்கூட.

தமிழ்நாட்டைப் பார்க்கும் போது என்ன தோணுது?

தமிழ்நாட்டு அரசியல் சூழல் சொல்ற மாதிரியில்ல. மக்கள் நம்மளோட தலையெழுத்துன்னு போறாங்க. தமிழ்நாட்டுல நடக்குற விஷயங்கள் அதிர்ச்சியா இருக்கு.பாரதியார் யுனிவர்சிட்டி துணைவேந்தர் கரப்ஷன்... கல்வித்துறை மேல மாணவர்கள் வச்சிருக்கிற நம்பிக்கை, தரம் ரெண்டையும் பாதிக்கும். மாணவர்களோட குறைகளைக் கேட்கிறதுக்கு ஒரு அமைப்பு வேணும். விசாரணை அடிப்படையில சம்பந்தப்பட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கிற அளவுக்கு அந்த அமைப்பு வலுவா இருக்கணும். பல்கலைக்கழகத்துல மாணவர்களுக்காக ஹெல்ப் லைன் வைக்கணும். நான் லண்டன்ல படிச்சப்போ மாணவர்கள் துணைவேந்தரை நேர்ல  பார்க்க முடியும். ஆனா நம்ம ஊர்ல அது முடியாது.

தகுதியில்லாத நபர்கள் லெக்சரரா வேலை பார்த்தால் அது ஸ்டூடண்ட்ஸை ஏமாத்துற வேலை. இளைஞர்கள் தான் அடுத்த தலைமுறைத் தலைவர்கள், நாட்டை ஆளப்போறவங்க அவங்கதான்னு சொல்றோம். அவங்களுக்கு தரமில்லாத கல்வி கொடுக்கிறது மூலமா அவங்களோட தரம் குறைக்கப்படுது. கல்வித்தரம் குறையுறது நாட்டோட வளர்ச்சியையே பாதிக்கும். அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டு நிலைமை மாறும்ணு நினைக்கிறேன்.

நிறைய கருத்துகள் சொல்றீங்க முகநூலில். அரசியலுக்கு வரும் எண்ணமேதும் உண்டா?

நான் அரசியலுக்கு வர்றதா? கூப்பிட்டா வருவேன். குழந்தைகள்,  பெண்கள் பிரச்னைகளை சரி பண்றதுக்காகத்தான் அரசியலுக்கு வரணும்.  பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நடக்கும் போது நிறைய கோபம் வருது. கண்ணு முன்னால‌ நடக்குற கொடுமைய யாரும் தட்டிக் கேக்கலையேன்ற ஆதங்கம். இதெல்லாம் யாரு மாத்துறதுன்ற கோபம் அது. எதையாவது சொல்லிட்டு சும்மா இருக்கக் கூடாது. மாற்றத்துக்காக செயல்படணும்.

மறுபடியும் நடிக்க வருவீங்களா?

அதுக்கு நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா இன்டஸ்ட்ரி ரொம்ப மாறிப் போய்டுச்சு. இப்போ நடிக்கணுன்ற எதிர்பார்ப்பு எனக்கில்ல.

‘முதல் மரியாதை’ பாடல் தான் உங்களோட அடையாளமா இன்னிக்கும் இருக்கு. எப்படி பீல் பண்றீங்க?

ரொம்ப சந்தோஷமா இருக்கு. எந்த மேடைலயும் “அந்த நிலாவத்தான்” பாடல் தான் எனக்கான அறிமுகமா இருக்கு. சமீபத்துல நடிகர் சங்க விழாவுல நடிகர் விவேக் என்ன அறிமுகப்படுத்தறப்போ  “நிலா”ன்னாலே என்னோட முகம் தான் நினைவுக்கு வர்றதா சொன்னார். அந்தளவுக்கு அந்தப் பாட்டு என்னை மக்கள் மனசுல இன்னும் வாழ வைக்குது. பெருமையா இருக்கு. பாடலுக்குக் காரணமான வைரமுத்து சார், இளையராஜா சார், பாரதிராஜா சார் மூணுபேருக்கும் நன்றி.

இப்பவும் பழைய நடிகர்கள் பற்றி மறக்காமல் முகநூலில் பதிவிடுகிறீர்களே?

பழசை நினைச்சுப் பார்க்கணும். கஷ்டப்பட்ட காலத்துல உதவினவங்கள நினைச்சுப் பார்க்கணும். அப்போதான் பணிவும் அமைதியும் வரும். அப்படியான நட்புதான் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா மாத்துது. கெட்ட எண்ணங்கள், ஊழல் போன்றதெல்லாம் நம்ம வாழ்க்கைக்குள்ள வராது. நமக்கு உதவின நம்மோட பயணிச்ச யாரையும் மறக்கக் கூடாது. என்னால முடிஞ்ச வரைக்கும் நாலு பேருக்கு நல்லது செய்றேன். சந்தோஷமா இருக்கேன்.

- யாழ் ஸ்ரீதேவி

Related Stories: