×

நான் பார்த்ததிலே... பான்டிங்தான் பெஸ்ட்!: இஷாந்த் பாராட்டு

சென்னை: நான் பார்த்ததிலேயே சிறந்த பயிற்சியாளர் என்றால் அது ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங்தான்’ என்று  இஷாந்த் ஷர்மா பாரா ட்டு தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகபந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா (31). ஐபிஎல் தொடரில்  டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். ஊரடங்கு நேரத்தில் சமூக ஊடகங்களில்  தகவல் பதிவதில் தீவிரமாக உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியினருடன் சமூக ஊடகமொன்றில் உரையாடிய போது, அந்த அணியின் பயிற்சியாளர் பான்டிங்கை வெகுவாகப் புகழ்ந்த இஷாந்த் கூறியதாவது: நான் சந்திந்த பயிற்சியாளர்களின் மிகச்சிறந்தவர் என்றால் அது பான்டிங்தான்.  ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு  கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் விளையாட இருந்ததால் பதற்றமாக இருந்தேன்.

போட்டிகளுக்கு முன்பு டெல்லியில்  நடந்த முதல் முகாம், முதல் நாள் அந்த பதற்றம் கொஞ்சம் அதிகமாகவே  இருந்தது. அப்போது பயிற்சியாளர்  பான்டிங், எனக்கு மிகுந்த நம்பிக்கை அளித்தார். கூடவே என்னிடம், நீங்கள் ஒரு மூத்த வீரர். நீங்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல நீங்கள்தான் என் முதல் தேர்வாக இருப்பீர்கள். அதனால் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்… என்று உத்வேகம் தரும் வகையில் பேசினார். அந்த உரையாடல் என்னை பதற்றத்தில் இருந்து மீட்டெடுத்தது. நம்பிக்கையை அளித்தது. இப்போது நீண்ட நாட்களாக ஊரடங்கில் முடங்கி இருக்கிறோம். எப்போது மீண்டும் ஆடுகளத்துக்கு திரும்புவோம் என்று ஆவலாக இருக்கிறேன். இவ்வாறு இஷாந்த் சர்மா கூறினார்.

ஐபிஎல் தொடர் அறிமுகமான 2008ம் ஆண்டு முதல் தொடரில் இஷாந்த் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கினார். டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்காவும் விளையாடி உள்ளார்.  இவரை 2018ம் ஆண்டு எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.  ஐபிஎல் தொடர்களில் இதுவரை 89 போட்டிகளில் 72 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 97 டெஸ்ட் போட்டிகளில் 297 விக்கெட் அள்ளியுள்ளார். மேலும் 80 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று  115 விக்கெட் எடுத்துள்ளார்.

Tags : Ponting , Ponting, Ishant
× RELATED பன்ட் பற்றி பான்டிங் வியப்பு: அதே அதிரடி ஆட்டம்!