பங்குச்சந்தை சரிவு; 3.65 லட்சம் கோடி இழப்பு

மும்பை: மத்திய அரசு சலுகை அறிவிப்புகள் வெளியிட்டும், பங்குச்சந்தையில் ஏற்றம் இல்லை. மாறாக, பங்குச்சந்தைகள் நேற்று அதல பாதாளத்துக்கு வீழ்ந்தன. மும்பை பங்குச்சந்தை 1,069 புள்ளிகள் சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ₹3.65 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில்துறைகள் முடங்கியதால் பங்குசந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இததால் பல லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்து விட்டனர்.  பொருளாதார மந்த நிலை மற்றும் கொரோனா ஊரடங்கால் தொழில்கள் முடங்கியதால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டு வந்தது.

மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து பொருளாரத்தை மீட்காவிட்டால், போட்ட பணம் எல்லாம் போய்விடுமே என முதலீட்டாளர்கள் புலம்ப தொடங்கினர்.

 இந்நிலையில், ₹20 லட்சம் ேகாடிக்கு ஊக்க சலுகைகள் அறிவிக்கப்படும் என, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இதற்கேற்ப, மத்திய அரசு நேற்று முன்தினம் வரை 5 நாட்களாக ₹21 லட்சம் கோடிக்கு சலுகை அறிவித்தது. இருப்பினும், பங்குச்சந்தை ஏற்றத்துக்கு கூட இது எந்த வகையிலும் உதவவில்லை. கடந்த வார இறுதியில் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ், 31,097 புள்ளிகளாக இருந்தது.

நேற்று வர்த்தக இடையில் 29,968 புள்ளிகள் வரை சரிந்தது. முடிவில், நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,069 புள்ளிகள் சரிந்து 30,029 ஆகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 314 புள்ளி சரிந்து 8,823 ஆகவும் இருந்தது. வங்கி, பொதுத்துறை பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. இதனால் மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் மதிப்பு 3,65,469.88 கோடி சரிந்து 1,19,00,649.71 கோடியானது. பங்குச்சந்தையில் ஏற்படும் தொடர் சரிவு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: