×

வீட்டில் இருக்கும் குழந்தைகளின் வாழ்வு சிறக்க வாசிப்பு வேண்டும்

ஒருவனுடைய வாழ்க்கை அறிவோடுதான் தொடங்குகிறது. அறிவற்றவன் மிருகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதுதான் யதார்த்தம். குழந்தைப் பருவத்தில் இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். வேடிக்கைகளிலேயே மனம் செல்லும். பெற்றோர் அவர்களின் கவனத்தை திருப்பி, அறிவின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்னைகளை தடுத்துக் கொள்ளவும், அவற்றில் இருந்து விடுபடவும் அறிவு மிக அவசியம். கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது, அல்லது ஆசிரியர் ஒருவர் மூலம் படிப்பது என்று நாம் படிக்கத் தொடங்க வேண்டும். அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து புத்தகங்களை படிப்பதன் மூலம் அறிவு வளரத் தொடங்கிவிடும். நல்ல புத்தகங்களை தேடித்தேடி படிக்க வேண்டும். நாளிதழ்கள், வார இதழ்களை படித்து உலக விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 வேலைக்கு மட்டுமே படித்துவிட்டால், வாழ்க்கை கல்வியை எப்போது படிப்பது, வேலைக்கு ஒரு நாள் முடிவு வந்துவிடும். ஆனால் வாழ்வு அப்படி அல்ல. படிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்தோ அல்லது குறிப்பிட்ட சிந்தனை சார்ந்தோ இருக்கக் கூடாது. அப்படி இருந்துவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருந்துவிடுவார்கள். அதனால் பிடிவாதம், வெறி உணர்வுதான் மேலோங்கும். அதனால் விரிந்த அளவில் படிப்பதால், அவர்களின் பார்வையும் விரியும். விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, சகிப்புத் தன்மையும், அடுத்தவர்களின் கருத்தை மதிக்கும் தன்மையும் வளரும்.  இது ஒருபுறம் இருக்க, அறிவியல் மற்றும் ஆய்வுத்துறையில் உள்ளவர்களுக்கு அடிப்படையில் சொல்லப்படுவது என்னவென்றால், ‘Read....read....read...read...read......read.... and then you practice..’. என்பதுதான் அது. பலமுறை படித்து, படித்து தெளிவு பெற்ற பிறகுதான் செயல்முறையில் இறங்க வேண்டும் என்பது அது. அறிவாளிகளை பள்ளிக்கூடமோ, பல்கலைக் கழகமோ உருவாக்குவது என்பது மிகவும் குறைவு. அறிவாளியாக இருக்கும் நபர், எந்த ஒரு விஷயத்தையும் தர்க்க ரீதியாக பார்க்கத் தெரிந்தவன். அவன் ஒரு கண்டுபிடிப்பாளன். ஆக்க சக்தி உள்ளவன். பல உண்மைகளையும், பல சிந்தனைகளையும் வெளிக் கொண்டு வரும் தன்மை கொண்டவன். பாமரர்களையும் படிக்க பழக்க வேண்டும். இல்லையென்றால், படித்தவர்கள் ஒரு புறமாகவும், படிக்காதவர்கள் ஒரு புறமாகவும் நிற்கும் பிளவுபட்ட சமூகம் உருவாகிவிடும்.

 வாசிப்பு இல்லாமல் கல்வி என்கிற செல்வத்தை நாம் பெறுவது கடினம். உலகை தற்போது அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், நமது நாட்டில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் வெறுமனே பொழுதைப் போக்குவது, டிவி பார்ப்பது என்று காலத்தை கழித்துக் கொண்டு இருக்கலாம். பள்ளி செல்லும் மாணவர்களுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. அதேபோல தனியார் பயிற்சி மையங்கள் மூலம் படித்தவர்கள் தற்போது வெளியில் சென்று படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் படிப்பது, ஆன்லைனில் படிப்பது போன்றவை வீட்டில் இருந்தே பாடங்களை படிப்பதற்கு வசதியாக இருந்தாலும் பொது அறிவை வளர்க்கும் படிப்புகளுக்கு நாம் புத்தகங்களை, நாளிதழ்கள், வார இதழ்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. படிப்பு தவிர மாணவர்கள் பொது அறிவு சார்ந்த புத்தகங்களை படிப்பது மிகவும் அவசியம். புத்தகங்கள் கிடைக்காத பட்சத்தில் நாளிதழ்கள், வார இதழ்களை படித்து உலகப் பற்றியும், அரசியல் பற்றியும், பொது விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள அவசியம் புத்தகங்கள் வாசிக்க வேண்டும். வாசிப்பை ஒரு கடமையாக வைத்துக் கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரமாவது படிக்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும். பொதுக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இப்படிக் கூறுகிறார்:  தற்போது வீட்டில் இருக்கும் மாணவர்கள் பொது அறிவு தொடர்பான எந்த புத்தகமும் படிக்கலாம். இயற்பியல் அறிஞர், நோபல் பரிசு பெற்ற சி.வி.ராமன், தான் எப்படி இயற்பியல் விஞ்ஞானி ஆனேன் என்று கூறும் போது, நான் இயற்பியல் ஆய்வு மேற்கொள்வதற்கு எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது 3 புத்தகங்கள்தான், அவற்றில் முதன்மையானது, அர்னால்டு எழுதிய ‘லைட் ஆப் ஏசியா’ (ஆசிய ஜோதி) என்ற புத்தகம்தான்.

அந்த புத்தகம், சித்தார்த்தர் எப்படி புத்தர் ஆனார் என்ற அந்த வாழ்க்கையை கூறக்கூடியது. சித்தார்த்தர் உண்மையைத் தேடினார். அதுபோல நானும் பிரபஞ்சத்தில் உண்மையைத் தேட வேண்டும் என்று நினைத்தேன் என சி.வி.ராமன் தெரிவித்துள்ளார். அதனால் தற்போது வீட்டில் இருக்கும் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இதுபோன்ற எந்த வகையான புத்தகம் கிடைத்தாலும், அந்த புத்தகங்களை வாசிக்கும் திறன் இருந்தால் ஒரு குழந்தை, ஒன்றை மற்றொன்றோடு இணைத்துப் பார்க்கும் பக்குவத்தைக் கொடுத்துவிடும். நாளிதழ்களையும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டும். ஒருநாள் நாளிதழ் வாசிக்கவில்லை என்றாலும் நாம் 20 நாட்கள் பின்னோக்கி சென்றுவிட்டோம் என்று பொருள். உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும்போதும் இது பயன்படும்.

நேர்காணலின்போது ஒரு குறிப்பிட்ட சொல்லாடல்களை குறித்து கேள்வி கேட்கும்போது நாம் நாளிதழ்கள் படித்து இருந்தால்தான் பதில் கூற முடியும். விளையாட்டு செய்திகள் மூலம் முந்தைய வரலாறுகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். ஆய்வும் செய்ய முடியும். தற்போது டிவி, இணைய தளம் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் உடனடியாக செய்திகள் வந்துவிட்டாலும் கூட நாளிதழ்கள் வாசிப்பு மிகமிக முக்கியம். தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்திலும்கூட நாளிதழ்களுக்கு மாற்று என்று வேறு ஒன்றை சொல்ல முடியாது. எனவே ஒவ்வொரு நாளும் நாளிதழ்களை வாசிக்கும் பழக்கத்தை இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tags : home ,Children , children ,home, ,read
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...