கொரோனா தடுப்பு பணியில் அயராது உழைத்து வரும் தூய்மை பணியாளர்களை அணிவகுப்பு மரியாதையுடன் கவுரவப்படுத்திய காவல்துறை

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அயராது பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு  திருநெல்வேலி காவல்துறை சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் ,தூய்மை பணியாளர்களும் மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவுக்கு தங்கள் உழைப்பை அயராது வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி மாநகரில் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் உன்னத பணியாற்றி வரும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களை கவுரவப் படுத்தும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் ஆலோசனையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஊழியர்கள் சார்பில் மாநகர சுகாதார அலுவலர் சதீஷ், காவலர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கண்ணன், உதவி கலெக்டர் (ப) சிவகுரு பிரபாகரன், காவல் உதவி ஆணையர் சதிஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அணிவகுப்பு மரியாதைக்கான ஏற்பாடுகளை ஆயுதப்படை உதவி ஆணையர் முத்தரசு, ஆய்வாளர் சாது சிதம்பரம் ஆகியோர் செய்திருந்தனர். தூய்மைப்பணியாளர்களுக்கான அணிவகுப்பு மரியாதை அவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலும் நெகிழ்ச்சியூட்டும் வகையிலும் அமைந்திருந்தது.

Related Stories: