திடீர் மழையால் குளிர்ந்த சென்னை: பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், திருவில்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், திருவில்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் பகலில் உணரப்படுகிறது. பல இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், பெரம்பலூா், அரியலூா், நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக வியாழக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூா், விழுப்புரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் வியாழக்கிழமை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்சமாக 82.4 டிகிரி பாரன்ஹீட் பதிவாக வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்தது. இந்நிலையில்,  காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், சென்னையில் தற்போது இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. சென்னை நகரில் கருமேகங்கள் சூழ்ந்ததால் 3.30 மணிக்கே இரவு 7 மணி போல் இருள் சூழ்ந்தது.

திருவள்ளூர், பூவிருந்தவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் உள்ள அம்பத்தூர், ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் மதுரவாயல், திருவேற்காடு, போரூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: