×

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 5ஆயிரம் கோடி மூலதனம் முடக்கம்: ஜவுளி உற்பத்தியாளர்கள் கலக்கம்

பள்ளிபாளையம்: கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் மட்டும்  5ஆயிரம் கோடி மதிப்பிலான மூலதனம் முடங்கி கிடப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். மனிதனின் அடிப்படை அத்தியாவசிய தேவைகளில் உணவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது உடை. நாகரீகத்தின் வளர்ச்சிக்கேற்ப உடைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவு நெசவுத்தொழிலில் ஏராளமான வேலைவாய்ப்பும், அதனால் நாட்டிற்கான வருவாயும் உயர்ந்தது. வேலை வாய்ப்பில், தனிமனித மேம்பாட்டில், விவசாயத்திற்கு அடுத்த நிலையில் நெசவுத்தொழில் பெரும்பங்காற்றுகிறது. தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் வேட்டி, சேலை. லுங்கி பெட்ஷீட், வீட்டு உபயோக துணிமணிகள் உள்ளூர் தேவையை முழுமையாக நிறைவேற்றி, வெளிமாநிலங்களுக்கும்  அனுப்பப்படுகிறது.

ரக ஒதுக்கீட்டு சட்டம், மின்கட்டண உயர்வு, நூல்விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் 20 ஆண்டுகளாக இருந்த போதிலும், கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ள ஜிஎஸ்டி பொரும்பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வரிவிதிப்பு சட்டத்தால் ஏராளமான சிறு முதலாளிகள் விசைத்தறி தொழிலாளிகளாக மாறிப்போனார்கள். ஜவுளித்தொழிலை மட்டுமே முழுமையாக நம்பி, சம்பாதித்ததை எல்லாம் மூலதனமாக முடக்கி போட்டுள்ள எண்ணற முதலீட்டார்கள் புலி வாலை பிடித்த கதையாக திணறுகின்றனர். ரூபாய் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை கொடுத்த அடியிலிருந்து மெல்ல மீண்ட நெசவாளர்கள், கொரோனா கொடுத்த அதிர்ச்சியில் கதிகலங்கி நிற்கின்றனர். உள்ளூர் முதலீட்டாளர்கள், நெசவு செய்தாலும், வடநாட்டு வியாபாரிகளே மொத்தமாக ஆர்டர் எடுக்கின்றனர். இவர்கள் தரும் பணத்தை நம்பித்தான் ஜவுளி சார்ந்த டையிங், பிளீச்சிங், பிராசசிங் என்று அனைத்து தொழிலும் நடக்கிறது. வாங்கிய துணிகளுக்கு மூன்று மாதம் கழித்தே செக்குகள் வழங்கப்படுகிறது. இந்த செக்குகள் பணமில்லாமல் திரும்பினால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் திணறும்.

இந்த வகையில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால் ஜவுளித்தொழில் மற்ற தொழில்களை விட கடுமையாக முடங்கியுள்ளது. ஏற்கனவே மூன்று மாத கடனுக்கு ஜவுளிகளை விற்று வந்த நிலையில் தற்போதுள்ள, ஊரடங்கால் கடன் விற்பனைக்கான கால நீட்டிப்பு மேலும் பல மாதங்களாம் என்று கருதப்படுகிறது. நேர்மையற்ற வியாபாரிகள் சிலரால் விற்ற சரக்குகளுக்கு பணம் வசூலிக்க முடியாத நிலையும் ஏற்படலாம் என்பதும் ஜவுளி உற்பத்தியாளர்களின் அச்சமாக உள்ளது. ஊரடங்கு தளர்த்திய பிறகு உணவுபஞ்சம் ஏற்படலாம். பணப்புழக்கம் குறையலாம். இது போன்ற சூழலில் ஏற்படும் பாதிப்பு ஜவுளித்தொழிலை மேலும்  பாதிக்கும். ஆடம்பர செலவை குறைக்கும் எண்ணத்தில் புதிய துணிகள் வாங்குவது நிறுத்தப்படும். அத்தியாவசிய தேவைகளை அறிந்து அதற்கு மட்டுமே செலவளிக்கும் நிலை வரும் போது, ஜவுளித்தொழிலின் வளர்ச்சி தற்போதுள்ள நிலையிலிருந்து மேலும் சரியும்.

தற்போதைய நிலவரப்படி ஜவுளி விற்பனை செய்த வகையில், மூன்று மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய், மொத்த வியாபாரிகளிடமிருந்து தரப்படாமல் உள்ளது. இதனால் மூலதன முடக்கம் ஏற்பட்டு உற்பத்தியாளர்கள், செய்வதறியாமல்  திணறி வருகின்றனர். தற்போதுள்ள கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களை மேலும் முடக்கி போட்டுள்ளது. கொரோனா போகுமா, ஊரடங்கு தளர்த்தப்படுமா, விற்ற தொகை கைக்கு வருமா என விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். நெருக்கடி நிலையிலிருந்து மீண்டாலும் நடைமுறை சிக்கலில் இருந்து ஜவுளித்தொழில் மீளுமா என்ற அய்யம் அனைவர் மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜவுளிஉற்பத்தி தொழில் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தணும்
சிறுசாயப்பட்டறை உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் கூறுகையில், ‘‘ஊரடங்கை தளர்த்தியதும் ஜவுளித்தொழில் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பிட முடியாது. அரசும், உற்பத்தியாளர்களும் ஒரே நேர்கோட்டில் சிந்தித்து செயப்படுத்தினால்தான் இந்த தொழில் இழப்பிலிருந்து மீள முடியும்.  எனவே விசைத்தறி தொழில் மீதான அனைத்து வரிகளையும் மத்திய மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். மின்சாரத்தை சலுகைவிலையில் வழங்கி, புதிய நெசவாளர்களுக்கு போதிய பயிற்சி கொடுத்து, நெசவாளரிகளின் வருமானத்தை உயர்த்தி, இந்த தொழிலை குடும்பத்தொழிலாக மாற்றி, படித்த இளைஞர்கள் பலரும் விரும்பும் வகையில் மாற்ற பல்வேறு சலுகைகளை அரசு வழங்கிட வேண்டும். குடிப்பழகத்திலிருந்து மெல்ல மீட்டு இழந்த உற்பத்தி திறனை  அதிகரிக்க வேண்டும். மாவட்டம் தோறும் ஜவுளி மையங்களை அமைத்து தரத்திற்கேற்ப அரசே கொள்முதல் செய்து உற்பத்தியாளர்களுக்கு மூலதன முடக்கமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Tags : Namakkal ,Salem ,Textile manufacturers ,districts ,Erode , 5000 Crore ,Capital, Salem, Namakkal ,Erode , Textile Manufacturers
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி:...