×

கொரோனா தொற்றுள்ளவர் சென்றதால் மூடப்பட்ட வங்கி ஊழியர்கள் உள்பட 21 பேரின் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனை: பரமத்திவேலூரில் பரபரப்பு

பரமத்திவேலூர்: பரமத்திவேலூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் சென்று வந்ததால் மூடப்பட்டுள்ள வங்கி கிளையின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 21 பேருக்கு, கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய, அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரியை சுகாதாரத்துறையினர் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதனால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரில், டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட 2 பேருக்கு, கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், ஒருவர் கடந்த மாதம் 27ம் தேதி, பரமத்திவேலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று பணம் எடுக்கச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறையினர், நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரமத்திவேலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையை, வரும் 28ம் தேதி வரை திறக்க தடைவிதித்து அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். மேலும், வங்கி ஊழியர்கள் மற்றும் அன்றைய தினம் வங்கிக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்களை அடையாளம் கண்டு, அவர்கள் அனைவரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பாதித்த நபரின் மனைவிக்கும், கொரோனா தொற்று இருப்பது கடந்த 2 நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, தனிமை படுத்தப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை ஊழியர்கள் மற்றும் அந்த குறிப்பிட்ட நாளில் வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் விதமாக, அவர்கள் அனைவரும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரியை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால், பரிசோதனைக்கு அழைக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.




Tags : bank employees , Blood , bank employees, covered ,coronavirus ,infection
× RELATED பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...