×

ஊரடங்கு உத்தரவை மீறி நாகை கடலில் குடும்பத்துடன் குளித்து கும்மாளமிடும் மக்கள்: அதிகாரிகள் அலட்சியம்

நாகை: அதிகாரிகளின் கண்களில் மண்ணை தூவி விட்டு ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று 100 பேர் குடும்பத்துடன் நாகை கடற்கரையில் குளித்தனர்.கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் பெற மட்டும் ஒரு நபர் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவும், பொது மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பொதுமக்கள் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நேற்று நாகை அருகே கடற்கரையில் 100 பேர் குடும்பத்துடன் வந்து கடல் நீரில் இறங்கி குளித்தனர். அதிகாரிகளின் கண்களின் மண்ணை தூவி விட்டு சமூக இட வெளியை பின்பற்றாமல் கடலில் இறங்கி குளிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் முடங்கி கிடங்கும் இவர்கள் குடும்பம், குடும்பமாக பொழுது போக்கிற்காக கடற்கரை வந்து கடலில் இறங்கி குளிப்பதை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு தெரியவில்லை.இவர்கள் நகரின் மையப்பகுதியில் தான் நின்று ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று சோதனை நடத்துகின்றனர். ஆனால் ஒரு ஊரின் உள்பகுதியில் அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ ஊரடங்கு உத்தரவு மீறப்படுகிறதா என்று சோதனை செய்வது இல்லை.நாகை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபோன்று கடல் பகுதியில் சமூக இடைவெளி மீறப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் சமூக இடைவெளி மீறலை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nagai Sea ,sea ,Nagai , Nagai bathe ,sea ,family kummalamitum ,authorities, ignored
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்