×

நாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை ஏப்.30 வரை நீட்டித்தது ஒடிசா அரசு: ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனங்களை மூட முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு

புவனேஸ்வர்: நாட்டிலேயே முதல்முறையாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் உலகளவில் பலி எண்ணிக்கை 88,403 ஆக உயர்ந்துள்ளது. 1,513,243 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 540 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 166 பேர் உயிரிழந்த நிலையில், 473 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க 8 மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மத்திய அரசும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் ஏப்ரல் 14-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 17-ம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடவும் முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 72 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 738 பேருக்கு தொற்று பாதிப்புடன் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. 8 பேர் உயிரிழந்துள்ளனர். 21 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில், ஒடிசா 16-வது இடத்தில் உள்ளது. இதுவரை ஒடிசா மாநிலத்தில் கொரேனாவால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 2பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளர்.


Tags : government ,Orissa ,country , Odisha government extends curfew for first time in the country till April 30
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்