ஏப்.14-வுடன் ஊரடங்கு முடிகிறதா? நீட்டிக்கிறதா?: பிரதமர் மோடி தலைமையில் காலை 11 மணிக்கு கூடுகிறது மத்திய அமைச்சரவை கூட்டம்

புதுடெல்லி: கொரோனா பரவலை தடுப்பதற்காக 21 நாள் முடக்கம் கடந்த மாதம் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்பின் பல தரப்பினருடன் பிரதமர் மோடி, காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆனால் அமைச்சரவை  ஆலோசனை கூட்டம் நடத்தவில்லை. முடக்கத்துக்குப்பின் கடந்த 6-ம் தேதி முதல் முறையாக காணொளி காட்சி மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இவ்வாறு காணொளி காட்சி மூலம் அமைச்சரவை கூட்டம் நடப்பது இதுவே  முதல் முறை.

இதில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை எதிர்த்து போராட போர்க்கால அடிப்படையில் நாம் தயாராக வேண்டும். தொழில்கள் தொடர்ந்து நடப்பதற்காக திட்டத்தை அனைத்து துறை அமைச்சகங்களும்  தயாரிக்க வேண்டும். 21 நாள் முடக்கம் முடிந்ததும், ஒவ்வொரு அமைச்சகம் முன்னுரிமை அடிப்படையில் 10 பிரிவுகளில் கவனம் செலுத்தி, 10 முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். கொரோனா அதிகம் பாதிக்காத பகுதிகளில், அனைத்து  துறைகளையும் மெதுவாக திறக்க தரமான திட்டத்தை அமைச்சர்கள் தயாரிக்க வேண்டும்.

நாம் பிற நாடுகளைச் சர்ந்திருப்பதை குறைத்து, மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க கொரோனாவால் ஏற்பட்டுள்ள இப்பிரச்னை ஒரு வாய்ப்பு. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய, புதுமையான தீர்வு காண  வேண்டும். மத்திய அமைச்சர்கள் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் மாவட்ட அளவிலான திட்டங்கள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண  வேண்டும். கொரானா பாதிப்பு சவால்களை முறியடிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்தும் வகையில் எம்.பி.க்கள் சம்பளம், படிகள், மற்றும் ஓய்வூதியத்தை ஓராண்டு காலத்துக்கு 30 சதவீதம் குறைக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு மத்திய  அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சி  நிதியையும், 2020-21 மற்றும் 2021-22ம் நிதியாண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதற்கிடையே, இந்தியாவில்  கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க பெரும்பாலான மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை மத்திய அரசு பரிசீலினை செய்துவருவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் 2-வது முறையாக காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்படவுள்ளது. கொரோனா  தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் தான் ஏப்ரல் 14-ம் தேதி முடியவுள்ள அமைச்சரவை கூட்டம் முடிகிறதா? இல்லை  நீட்டிக்கப்படுமா? என்பது தெரியவரும். மேலும், பல்வேறு சலுகைகளை அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories: