இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவி

காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், தினக்கூலிகளாக வேலை செய்யும் அமைப்பு சார தொழிலாளர்கள் மற்றும் இருளர், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒருவேளை உணவுக்கு வழியின்றி சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக குழந்தைகள் கண்காணிப்பகம் என்ற அமைப்பு சார்பில் இருளர் இன மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அமைப்பின் தலைவர் ஆசூர் ராஜ், வாலாஜாபாத் அடுத்த ஆசூர், அரப்பாக்கத்தை அடுத்த ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்களின் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் பகுதியில் இருளர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மக்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டனர். தனியார் அமைப்பு சார்பில், 100 குடும்பங்களை சேர்ந்த 300 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர். மேலும் அனைத்து வீடுகளுக்கும் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் டிராக்டர் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Related Stories: