செய்யூர் அருகே கோணி பைகள் தட்டுப்பாட்டால் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல்: விவசாயிகள் வேதனை

செய்யூர்: லத்தூர் ஒன்றியம் தேவனூர் கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதி விவசாயிகள் கிராமத்தை சுற்றியுள்ள 150 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு, கடந்த மாதம் அறுவடை செய்தனர். அதனை, அக்கிராமத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டையில் கட்டி வைத்தனர். கடந்த 15 நாட்களாக நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்களை மூட்டையில் கட்டுவதற்கு, கோணி பைகள் இல்லாமல் உள்ளது. கோணிப் பை தட்டுப்பாட்டால், அறுவடை செய்த நெற்கள் களத்தில் அம்பாரம் அமைத்து தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

 இதனால், நெல் அம்பாரங்கள் வெயிலில் காய்ந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் அலட்சியம் காட்டி வருவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மேலும், நெல்லை பாதுகாக்க விவசாயிகள் இரவும், பகலுமாக அங்கேயே தங்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோணிப் பை தட்டுப்பாட்டை போக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நெற்களில் தரமும், எடையும் குறையும் என விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். குறிப்பாக, செய்யூர் தாலுகா முழுவதும் இப்பிரச்னை உள்ளதாக பெரும்பாலான விவசாயிகள் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து இந்த கோணிப் பை தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: