பேட்ரோல் சும்மா நிக்குது...இன்ஸ்பெக்டர் காரை விட்டு இறங்க மாட்றாரு...போலீசாரை ஓபன் மைக்கில் வெளுத்து வாங்கிய திருச்சி கமிஷனர்

திருச்சி: திருச்சியில் சாலைகளில் மக்கள் நடமாடுவதையும், போலீசார் பணியில் செய்யாமல் சும்மா இருந்ததை பார்த்த மாநகர போலீஸ் கமிஷர் வரதராஜு ஊரடங்கு அமலில் உள்ளதா, இல்லையா என்று தெரியவில்லை என்று ஓபன் மைக்கில் வெளுத்து வாங்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு (14ம் தேதி வரை) அமலில் இருந்து வருகிறது. இதை பற்றி கவலைப்படாமல் திருச்சி மாநகரில் பல இடங்களில் இருசக்கர வாகனங்களில் நேற்று 2 பேர் பயணம் செய்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். சாலையில் எந்தெந்த இடங்களில் போலீசார் நிற்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வாகன ஓட்டிகள், அருகில் உள்ள சந்துக்கள், சிறிய சாலைகளில் புகுந்து சென்று விடுகின்றனர். திருச்சியில் நேற்று வழக்கம்போல் இருசக்கர வாகனங்களில் ஹாயாக வெளியில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் மறித்து கேட்டால் காய்கறி வாங்க செல்வதாகவும், டிபன் வாங்க செல்வதாக கூறினர்.

இதற்கிடையில், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் மாநகர போலீசாருக்கு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை பார்வையிட்டு திரும்பிய மாநகர கமிஷனர் வரதராஜூ, சாலையில் பைக்குகளில் பொதுமக்கள் சாரை சாரையாக செல்வதையும், ஒரு பேட்ரோல் வாகனம் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதை செபார்த்ததும் வெகுண்டெழுந்தார். பின்னர் மைக்கை பிடித்த கமிஷனர், தற்போது பொதுமக்கள் அதிகளவில் வாகனங்களில் செல்கின்றனர். இது ஊரடங்குபோல் இல்லை. பேட்ரோல் போலீசார் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.

பின்னர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு இன்ஸ்பெக்டர் சாலையோரம் காரில் அமர்ந்திருந்தார். இதை பார்த்து அவரது காருக்கு பின்னால் சென்று காரை நிறுத்தினார். பின்னர் மீண்டும் மைக்கில் இன்ஸ்பெக்டர் ஒருவர் காரில் இருந்து இறங்காமலே உள்ளார். எந்த போலீசாரும் ஒழுங்காக வேலை பார்ப்பதில்லை. இன்ஸ்பெக்டர்கள் அனைவரும் இறங்கி வேலை பாருங்கள் என கோபமாக பேசினார். இதையடுத்து சில நிமிடங்களில் மாநகரில் போலீசார் வாகன தணிக்கை செய்து மக்கள் நடமாட்டதை கட்டுப்படுத்தினர்.

Related Stories: