×

144 தடை உத்தரவால் 108 ஆம்புலன்ஸ் விபத்து அழைப்புகள் குறைந்தது

நெல்லை: தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் விபத்து தொடர்பான அழைப்புகள் 108 ஆம்புலன்ஸ் ஆம்புலன்சுக்கு 99.5 சதவீதம் அளவிற்கு குறைந்து விட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம்தேதி நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் காய்கறி, பலசரக்கு, மருத்துவம், பால், பத்திரிக்கை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன போக்குவரத்து மட்டும் மிகக் குறைந்த அளவில் நடைபெறுகிறது.  காலை 6 மணி முதல் பகல் ஒரு மணிவரை காய்கறி உள்ளிட்ட தேவைகளுக்காக, நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கபடுவதால் அந்தந்த பகுதி மக்கள் அருகே உள்ள மையங்களுக்குச் சென்று வாங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்களின் தொலைதூரப் பயணம் அதிகபட்சம் இரண்டு கிலோமீட்டர் என குறைக்கப்பட்டுள்ளது.

வாகனப் போக்குவரத்து இல்லாத நிலையில் தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகள் பெருமளவு குறைந்து விட்டன. குறிப்பாக 108 ஆம்புலன்ஸ் சேவையில் நாள்தோறும் விபத்துக்கான அழைப்புகளே மிக அதிக அளவில் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக டெலிவரி அழைப்பு உள்ளது. இதற்குப் பின்னரே மற்ற உடல்நலக்குறைவு, குழந்தைகளுக்கான உடல் நலக்குறைவு போன்ற அழைப்புகள் வருகின்றன. தற்போது தடை உத்தரவு அமலில் உள்ளதால் விபத்துகளுக்கான அழைப்பு நாடு முழுவதும் 99.5 சதவிகித அளவிற்கு குறைந்துவிட்டது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், நாள்தோறும் எங்களுக்கு வரும் அழைப்புகளில் விபத்துக்கான அழைப்புகளே அதிகமாக இருக்கும். நேரடி சாலை விபத்துகள் மட்டுமின்றி விபத்து ஏற்பட்டு வேறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கான பணியும் அதிக அளவில் இருக்கும்.

இதுபோல் டெலிவரிக்கான அழைப்புகளும் இரண்டாவது கட்டமாக இருக்கும். தற்போது 144  தடை அமலுக்கு வந்த பின்னர் விபத்து  அடியோடு குறைந்து விட்டது என சொல்லுமளவிற்கு உள்ளது. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை இங்கு 2 குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் உள்பட 32 ஆம்புலன்ஸ் சேவை வாகனங்கள் உள்ளன. இது தவிர இருசக்கர வாகன சேவை ஒன்றும் உள்ளது. மாவட்டத்தில் சராசரியாக இந்த வாகனங்களுக்கு 24 மணி நேரத்தில் 100 முதல் 150 அழைப்புகள் வரும். இதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் விபத்து தொடர்பாக மட்டுமே இருக்கும். ஆனால் கடந்த 13 நாட்களுக்கு மேலாக விபத்துக்கான அழைப்பு இல்லை. மாநகரப் பகுதியில் மட்டும் நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு விபத்து அழைப்பு வருகிறது. அதுவும் சாலைகள் போக்குவரத்து இன்றி இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்  அதிவேகமாக சென்று விபத்தில் சிக்குவது போன்ற ஓரிரு அழைப்புகள் மட்டுமே வருகின்றன என்றனர்.

மது தடையும் காரணம்
விபத்துக்கள் குறைவதற்கு மது தடையும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. விபத்தில் சிக்குபவர்கள் எண்ணிக்கையில் சராசரியாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அல்லது அதிகாலை 3 மணிக்கு கண்ணயர்ந்து நிலையில் ஓட்டுபவர்கள் விபத்தில் சிக்குவது சற்று அதிகமாக உள்ளது. தற்போது மது கடைகளும் மூடப்பட்டு விட்டதால் வாகனம் ஓட்டும் ஒரு சிலரும் மது அருந்தாத நிலையில் ஓட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் விபத்து குறைய முக்கிய காரணமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags : accident , 144 ban, 108 ambulance, accident, low
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!