கொரோனா தடையால் வாங்க ஆளில்லை கால்நடைகளுக்கு உணவாகும் வாழை இலைகள்: வருவாய் இன்றி விவசாயிகள் தவிப்பு

திருப்புவனம்: கொரோனா தடையால் திருப்புவனம் வட்டாரத்தில் வாழை சாகுபடி செய்த விவசாயிகள் வாழை இலைகளை விற்பனை செய்ய முடியாமல் அறுவடை செய்யப்பட்ட இலைகளை கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.திருப்புவனம் வட்டாரத்தில் நாட்டு வாழை, ஒட்டு வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. 10 மாதங்களில் வாழைகள் விளைச்சலுக்கு வந்து விடும். 12வது மாதத்தில் வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். வாழை விவசாயிகள் பெரும்பாலும் முகூர்த்த நாட்கள், திருவிழாக்களை கணக்கிட்டு வாழை சாகுபடி செய்வார்கள். திருப்பாச்சேத்தி, கானூர், பச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி, சித்திரை திருவிழாக்களை நம்பி ஆயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருவிழாக்கள், திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதால் வாழை பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். வாழை பயிரிட்ட விவசாயிகள் 10வது மாதத்தில் இருந்து வாழை இலைகளை அறுவடை செய்வார்கள். வாரத்திற்கு ஒரு முறை ஏக்கருக்கு 5 ஆயிரம் இலைகள் வரை அறுவடை செய்யப்படும். வாரம்தோறும் அறுவடை செய்யாவிட்டால் வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் அறுவடை செய்து மதுரை மார்கெட்டிற்கு அனுப்பி வைப்பார்கள்.

மற்ற பகுதி வாழை இலைகளை விட திருப்புவனம் பகுதி வாழை இலைகள் 10 நாட்கள் வரை வாடாது என்பதால் வியாபாரிகள் விரும்பி வாங்குவார்கள். தற்போது கொரோனா தடையால் இலைகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக அளித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், 300 இலைகள் கொண்டு ஒரு கட்டு வாழை இலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். தற்போது அறுவடை செய்த இலைகளை வாங்குவதற்கு ஆளில்லை. வாழை விவசாயத்தில் வாழை பழம், வாழை காய், வாழை இலை, வாழை தண்டு, வாழை பூ, வாழை மரம் என அனைத்துமே வருவாய் அளிக்க கூடியது. வாழைத்தார் அறுவடை செய்த பின்னும் மூன்று மாதத்திற்கு வாழை இலைகள் அறுவடை செய்யப்படும். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக இலைகள், வாழைத்தார்கள் விற்பனை செய்ய முடியவில்லை. ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்துள்ளோம். வறட்சி காரணமாக விளைச்சல் பாதித்து நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. நோய் தாக்கி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தற்போது விளைச்சல் இருந்தும் விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: