ஊரடங்கால் 15 பேர் பங்கேற்புடன் திருமணம் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய புதுமண தம்பதி : வந்தவாசி அருகே நெகிழ்ச்சி

வந்தவாசி:  ஊரடங்கு உத்தரவு காரணமாக, வந்தவாசி அருகே எளிய முறையில் நடந்த திருமணத்தில் உறவினர்கள் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதி, அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டவர்களுக்கு உணவு வழங்கினர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி மகன் ரமேஷ்(25). இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த தட்டாம்பூண்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகள் ரதிமீனா(21) என்பவருக்கும், திருமணம் செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கான அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மணமகன் வீட்டில் எளிய முறையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. அப்போது, மணமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். இதில் இருவீட்டார் சார்பிலும் மொத்தம் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு, புதுமண தம்பதி வீதி, வீதியாக சென்று உணவு பார்சல் வழங்கினர். அவர்களை தூய்மை பணியாளர்கள் வாழ்த்தினர். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories: