×

நெல்லை ரயில் நிலையத்தில் கொரோனா வார்டுகளுக்கு கூடுதலாக 8 பெட்டி ஒதுக்கீடு: ஒரு பெட்டியில் 18 நோயாளிகளுக்கு படுக்கை வசதி

நெல்லை: கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக நெல்லை ரயில் பெட்டிகளில் கொரோனா சிகிச்சை வார்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 8 பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 18 பெட்டிகளில் கொரோனா வார்டுகள், நெல்லை ரயில் நிலையத்தில் தயாராகி வருகின்றன.
கொரோனா பரவல் தமிழகத்தில் 2வது கட்டத்தில் இருக்கும் நிலையில், நேற்றைய மாலை நேர நிலவரப்படி 690 பேர் அந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். கொரோனா நோயை தடுக்கும் வகையில் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருவதால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றிட தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது. அதன்பேரில் முக்கிய நகரங்களில் ரயில் பெட்டிகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக வார்டுகளாக மாற்றம் பெற்று வருகின்றன. நாடு முழுவதும் 3 லட்சத்து 20 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 20 ஆயிரம் கோச்சுகளை வார்டுகளாக மாற்றம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இங்குள்ள பெட்டிகளையும் தனி வார்டுகளாக மாற்ற ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் நெல்லை ரயில் நிலையத்தில் முதற்கட்டமாக 10 கோச்சுகள் தனி வார்டுகளாக உருமாற்றம் செய்யப்பட்டன. தற்போது மேலும் 8 பெட்டிகள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அவையும் கொரோனா வார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.கொரோனா பெட்டிகளில் கழிப்பறைகள், குளியல் அறைகள் தவிர, மருத்துவர்கள் அமர பெட்டிகளின் முகப்பு பகுதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்த குப்பைத் தொட்டிகளும் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. பெட்டி முழுவதும் காணப்படும் மிடில் பெர்த் படுக்கைகள் அகற்றப்பட்டுள்ள சூழலில், ஜன்னல்களை சுற்றிலும் கொசுவலையும் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஒரு பெட்டியில் சுமார் 18 படுக்கைகள் இடம் பெறும் வகையில் பெட்டிகளின் வடிவமைப்பு காணப்படுகின்றன. மருந்து பொருட்களை வைத்திட தனி வசதிகளும் இடம்பெற்றுள்ளன. இப்பணிகள் முடிந்தவுடன், தெற்கு ரயில்வே அதிகாரிகள் பார்வையிட உள்ளனர். ரயில் பெட்டிகளில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வார்டுகள் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக நெல்லை சுற்றியுள்ள பகுதிகளில் மருத்துவமனைக்கு கொண்டு வர முடியாத பயணிகளுக்கு இதில் இரு பெட்டிகளோ அல்லது பெட்டிகள் தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளுக்கே தண்டவாளம் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்தந்த பகுதிகளில் வைத்தே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் குணமான பின்னர், பெட்டிகள் திரும்ப நெல்லை வந்து சேரும்.

2500 டன் ரேஷன் அரிசி வருகை
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு நே ற்று தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 டன் ரேஷன் அரிசி மூடைகள். 42 பெட்டிகளில் வந்து சேர்ந்தன. இவற்றை நெல்லையில் அதிகாரிகள் பெற்று புரத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.



Tags : Corona Wards ,Paddy Train Station , 8 Box Allotment , Corona Wards , Box
× RELATED 'நீதிமன்றங்களை திறக்காவிட்டால்...