தடையை மீறி இறைச்சி கடை நடத்தியவர்கள் மீது வழக்கு காவல் நிலையத்துக்குள் புகுந்து இன்ஸ்பெக்டரை மிரட்டிய அ.தி.மு.க. செயலாளர்: பு.புளியம்பட்டியில் பரபரப்பு

சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டியில் தடை உத்தரவை மீறி இறைச்சிக் கடை நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டரை அ.தி.மு.க. நகர ெசயலாளர் காவல் நிலையத்துக்குள் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இறைச்சிக்கடைகளில் அதிக கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி பின்பற்றப்படாத காரணத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகள் செயல்படக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி செயல்படும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் கடந்த 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி செயல்பட்ட இறைச்சிக் கடைகள் நடத்தியவர்கள் மீது போலீசார் மீது வழக்குப்பதிந்தனர்.

இதற்கிடையே, காவல்நிலையத்திற்கு சென்ற புஞ்சைபுளியம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி இறைச்சிக்கடைக்காரர்கள் மீது வழக்குப்பதியக்கூடாது. அவர்களை விட்டுவிடுங்கள் என புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் பிரபாகரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் பிரபாகரன், காவல் நிலையத்தில் பஞ்சாயத்து பேச வேண்டாம். வெளியே போங்கள் என விரட்டினார். ஆத்திரமடைந்த மூர்த்தி உடனே தனது செல்போனை எடுத்து அரசியல் பிரமுகர் ஒருவரை தொடர்பு கொண்டு இந்த இன்ஸ்பெக்டரை உடனடியாக கூடலூருக்கு டிரான்ஸ்பர் பண்ணுங்கள் என பேசினார். இதனால், நகர செயலாளர் மூர்த்தியை இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வீடியோ எடுத்தார். இதைப்பார்த்த மூர்த்தி, வீடியோ எடுக்குறீங்களா? எடுத்து என்ன செய்வீங்க? என நக்கலாக கேட்டார்.

இன்ஸ்பெக்டர் சத்தம்போட்டதையடுத்து நகர செயலாளர் மூர்த்தி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரியை ஆளுங்கட்சி நிர்வாகி காவல் நிலையத்திற்குள் புகுந்து மிரட்டிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: