மத்திய உள்துறை செயலர் கடிதம் எதிரொலி: நாளை காலை ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 14ம் தேதி வரை 21நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்ய ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் தலைமையில் இந்த பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதன்படி குழுவை அமைத்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கையின்படி, நாடு  முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்தியஉள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை 11 மணிக்கு 12 சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.  

Related Stories: