ஏப்.14-க்கு பின் ஊடரங்கு நீட்டிப்பா?: அத்தியாவசிய பொருட்கள் இருப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

டெல்லி: உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாண்டியுள்ளது. இதுவரை 149 பேர்  உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக,வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 21 நாள் முடக்கப்படுவதாக கடந்த  மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இருப்பினும், கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் உட்பட பல மாநில அரசுகள் மற்றும் வல்லுநர்களின் கோரிக்கையின்படி, நாடு  முழுவதும் 21 நாள் ஊரடங்கை வரும் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், அத்தியாவசிய பொருட்கள் போதிய அளவு இருப்பதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அத்தியாவசிய பொருட்கள் சட்டம்  1955 ஐ நடைமுறைப்படுத்துவதன் மூலம் பதுக்கல் / கறுப்பு சந்தைப்படுத்துதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய பொருட்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் வலியுறுத்தி கடிதம்  குறிப்பிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பார்க்கும்போது, ஏப்ரல் 14-ம் தேதிக்கும் மேலும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக சந்தேசகம் எழுகிறது.

Related Stories: