டாஸ்மாக் குடோனில் ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள மதுபானம் கொள்ளை

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை 2வது பிரதான சாலை அருகில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானங்கள் சப்ளை செய்யப்படுகிறது. கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு பகுதியிலுள்ள மதுபான ஆலையில் இருந்து இந்த குடோனுக்கு மதுபானங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்துள்ளது. அப்போது, ஊரடங்கு உத்தரவு காரணமாக லாரியில் இருந்து மது பானங்களை இறக்கி குடோனில் வைக்க ஊழியர்கள் யாரும் வரவில்லை.

இதனால், குடோனில் லாரியை நிறுத்திவிட்டு, காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். டாஸ்மாக் அதிகாரிகள் அந்த லாரியை தினமும் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை லாரியை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அதிலிருந்த 96 புல் பாட்டில்கள், 48 ஆப் பாட்டில்கள் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ₹1.2 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து டாஸ்மாக் மேலாளர் ராஜகோபால், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்தபோது கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால், இந்த கொள்ளை சம்பவத்தில் அவர்களும் உடந்தையா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Related Stories: