அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: பிரதமர் மோடிக்கு ஆதரவாக #IndiaTrustsPmModi ஹாஸ்டக் டுவிட்டரில் டிரென்டிங்

டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த வைரசை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு தரப்படும் பழங்கால, அதிக செலவில்லாத ஹைடிராக்சி குளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். உலகின் பல நாடுகள் இம்மருந்தை பரித்துரைத்துள்ளன. இந்திய மருத்துவ சங்கமும் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிந்துரை செய்துள்ளது. உலகிலேயே இம்மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியதும், மருந்து இருப்பை உறுதிபடுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின், பாராசிட்டமால் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி தடை விதித்தது.

இதனால், அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. ஏற்றுமதிக்கு தடை விதித்ததை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தின. இந்தியாவின் ஏற்றுமதியில் 47 சதவீதம் அமெரிக்காவுக்கு தான்  செல்கிறது. இந்த மருந்தை பொறுத்த வரையில் அமெரிக்கா, இந்தியாவையே அதிகம் நம்பி உள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிறன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,  ஏற்கனவே ஆர்டர் செய்த அளவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை தர வேண்டுமென வலியுறுத்தினார்.  

இதைத்தொடர்ந்து ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஹைட்ட்ராக்சி குளோரோகுயின் மருந்து வேண்டுமென பிரதமர்  மோடியிடம் கேட்டுள்ளேன். இந்தியாவுடன் நல்ல நட்புறவு நிலவுவதால், அவர் தராமல் இருந்ததால்தான் ஆச்சரியப்படுவேன். அதே சமயம் அவர் மருந்தை தர மறுத்தாலும் பரவாயில்லை. அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்,’  என எச்சரிக்கை விடுத்தார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு பணிந்துள்ளது. டிரம்ப் மிரட்டலால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கான தடையை தளர்த்தி  உள்ளது.

இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு இந்தியா பணிந்து விட்டதாக சர்வதேச நாடுகள் கூறி வருகின்றன. இதனால், இது சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவிலும் பிரதமர் மோடி அமெரிக்கா மிரட்டலுக்கு பணிந்துவிட்டார் என  இணையதளத்தில் மீம்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ஆதரவு தெரிவிக்கும் விதமாக #IndiaTrustsPmModi என்ற ஹாஸ்டக் டுவிட்டரில் டிரென்டிங் ஆகி இந்தியளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Related Stories: