நேற்று யாரும் உயிரிழக்கவில்லை: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுகானில் ஊரடங்கு தளர்ப்பு...இயல்பு நிலைக்கு திரும்பும் சீன மக்கள்

பெய்ஜிங்: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுகானில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205-க்கும்  மேற்பட்ட  நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  82,000ஐ நெருங்கியுள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 82,091 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

14 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3.28  லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். சீனாவின் ஹூபே மாகாணத்திலும் அதன் தலைநகரான வூஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது  குறைந்ததால், மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு  வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெரும்பாலான தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட தொடங்கி இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன.

கொரோனாவின் ஆரம்ப புள்ளியான சீனாவில் 2 மாத கடுமையான கட்டுப்பாடுகளால் நோய் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், ஹூபெய் மாகாணத்தில் தினசரி ஒருசிலர் இறப்பது வாடிக்கையாக இருந்தது.  இந்நிலையில், முதல் முறையாக அங்கு நேற்று ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.  உள்நாட்டை சேர்ந்த யாருக்கும் புதிதாக நோய் தொற்றும் ஏற்படவில்லை.  கொரோனாவுக்கு சீனாவில் 3,335 பேர் பலியான நிலையில் 95 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சீனாவின் வுகானில் 76 நாட்களுக்கு பின் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததால் ஊரடங்கை சீன அரசு தளர்த்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் இயல்பு  வாழ்க்கைக்கு திரும்பிய நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

‘கிரீன் சிக்னல்’

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ஓரளவு அடங்கிய நிலையில், வுகான் நகரில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். அங்குள்ள தொழிற்சாலைகளும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. இருந்தும், அங்கு   மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சீன அரசு சந்தேகிக்கிறது. அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. கொரோனா பாதிப்பு அறிகுறி இருப்பர்களை கண்டுபிடிக்க, இங்கு செல்போன் வசதி பயன்படுத்தப்படுகிறது.   தொழிற்சாலைகளுக்கு பணிக்கு செல்பவர்களை சோதனை செய்ய வசதியாக செல்போனில் புதிய அறிவியல் முறையை பின்பற்றுகின்றனர்.

அதன்படி, பணியாளர் வைத்திருக்கும் ஸ்மார்ட்போனின் பச்சை நிற சிக்னல் மூலம் வாழ்க்கை இயங்கத் தொடங்குகிறது. அதாவது, பச்சை அடையாளம் என்பது ஒரு ‘சுகாதார குறியீடு’ ஆகும். இது, சம்பந்தப்பட்ட நபர் நோய்த்தொற்று   அறிகுறிகளிலிருந்து விடுபட்டுள்ளார் என்பதை கூறுகிறது. சுரங்கப்பாதை பணி, ஓட்டலுக்குள் செல்லுதல், வுகானுக்குள் கடைவீதிகளுக்குள் நுழைய இந்த அடையாளம் அவசியம். சீனாவில் கிட்டத்தட்ட அனைவரும் ஸ்மார்ட்போன்   வைத்திருப்பதால், இந்த சுகாதார குறியீடு திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தரவுகளை முழுமையாக வைத்துள்ள சீன அரசு, மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

Related Stories: