×

பேட்டியளிப்பது ஊரடங்கு உத்தரவை மீறும் செயல் என்றால் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது வழக்கு தொடர முடியுமா?

* கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கேள்வி

சென்னை:  கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவை சேர்ந்த பழ.நெடுமாறன், திருமாவளவன், கொளத்தூர் மணி, பேராசிரியர் ஜவாஹிருல்லா, தி.வேல்முருகன்,  தெஹ்லான் பாகவி, கு.ராமகிருட்டினன், திருமுருகன் காந்தி, கே.எம்.சரீப்,  இனிகோ இருதயராஜ், வன்னி அரசு, நெல்லை முபாரக், அப்துல் சமது, பெரியார்  சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: சுப.உதயகுமாரன் ஊரடங்கு காரணமாக அரசின் உத்தரவை மதித்து, தனது வீட்டில் நடத்திய உண்ணாவிரதம் குறித்தும், அதன் கோரிக்கைகள் குறித்தும் முகநூலில் மட்டுமே பதிவிட்டிருந்தார். அவர் எங்குமே பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

மாறாக நன்கு அறிமுகமான மக்கள் பணியாளர் என்ற அடிப்படையிலும், காவல்துறையினரின் தகவலின் பேரிலுமே பத்திரிக்கையாளர்கள் அவரது இல்லத்திற்கு சென்று பேட்டியெடுத்துள்ளனர். உண்மை இவ்வாறிருக்க, அரசியல் காரணங்களுக்காக சுப.உதயகுமாரன் மீது காவல்துறை வழக்குப் பதிவு  செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிப்பது ஊரடங்கு உத்தரவை மீறும் செயல் என்றால், நாள்தோறும் அமைச்சர்களும், அதிகாரிகளும் பத்திரிகையாளர்களை சந்தித்து கொண்டுதான் இருக்கின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடர முடியுமா  என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல் ஆள்வோர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்கள் எதுவும் எழக்கூடாது என்கிற ரீதியில்,  விமர்சனங்களை முன்வைப்பவர்களை வழக்கு தொடுத்து முடக்க நினைப்பது என்பது கருத்துச் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான அடக்குமுறையாகும். ஆகவே, ஏதோ ஒரு அரசியல் காரணங்களுக்காக சுப.உதயகுமாரன் மீது காவல்துறை தொடர் வழக்குப் பதிவுகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல.



Tags : interview ,ministers , Curfew, Corona
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...