×

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் நீதிமன்றங்களின் செயல்பாடு எப்படி இருக்கும்? தலைமை நீதிபதி இன்று அறிவிக்கிறார்

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 14ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஊரடங்கு உத்தரவின் காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்தில்  அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகிறது.  இ-மெயில் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்தபடியே நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி  வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார், அகில இந்திய பார் கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

அப்போது, வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் தற்போது நடைபெறுவதைப்போல் அவசர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஜாமீன் தொடர்பான மனுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் அப்படி ஜாமீன் மனுக்களை விசாரித்தால்  கூட்டம் குறைந்துவிடும் என்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து தலைமை நீதிபதி மற்றும் நிர்வாகக் குழு நீதிபதிகள் அடங்கிய குழு மாவட்ட நீதிபதிகளிடம் ஆலோசனை நடத்தினர். வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்ந்து நீதிமன்றத்தை எப்படி நடத்துவது என்பது குறித்து இந்த ஆலோசனை நடந்தது.  இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் நீதிமன்றங்கள் செயல்படுவது குறித்த  முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : courts ,Chief Justice , Curfew, courts, chief justice
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...