சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் கொரோனா பாதித்த ஒருவர் 406 பேருக்கு பரப்பி விடுவார்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் கொரோனா தொற்று பாதித்தவர் ஒருவர், 406 பேருக்கு பரப்பும் ஆபத்து இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 8 பேர் பலியாகி உள்ளனர். புதிதாக 354 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானார் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு மொத்தம் 4421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்ரா கிழக்கு டெல்லி, கவுதம் புத்தா நகர், மும்பை ஆகிய பகுதியில் எடுக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நல்ல முடிவு கிடைத்துள்ளது. இதை பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா உறுதி செய்யப்பட்ட ஒருவர், சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு போன்றவற்றை முறையாக பின்பற்றாவிட்டால் அவர் 30 நாட்களில் 406 பேருக்கு இந்த தொற்றை பரப்பு அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றியதன் மூலம், இந்த காலக் கட்டத்தில் தொற்று பாதிப்பு சராசரியாக  இரண்டரை நபர்கள் என்ற அளவில் குறைந்துள்ளது. எனவே, சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஊரடங்கை கடைப்பிடிப்பது கொரோனா தடுப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: