ஒரேநாளில் மேலும் 150 பேருக்கு வைரஸ் தொற்று மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,000ஐ தாண்டியது: மும்பையில் மட்டும் 652 பேர்; 40 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மேலும் 150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,018 ஆக அதிகரித்தது. மும்பையில் மட்டும் இந்த நோயால் 652 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசுக்கு நேற்று மும்பையில் மேலும் 5 பேரும், புனேயில் 3 பேரும் நேற்று பலியானதை தொடர்ந்து, மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் இரவு வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 868 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 52 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், நேற்று மட்டும் மகாராஷ்டிரா முழுவதும் 150 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதில் அதிகபட்சமாக மும்பையில் 116 பேருக்கு வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,018 ஆகவும், மும்பையில் 652 ஆகவும் அதிகரித்தது. மும்பையைத் தவிர நேற்று புனேயில் 18, அகமத்நகர், நாக்பூர், அவுரங்காபாத்தில் தலா 3, தானே, புல்தானாவில் தலா 2, சத்தாரா, ரத்னகிரி, சாங்கிலியில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரசுக்கு நேற்று மும்பையில் 5 பேரும், புனேயில் 3 பேரும் பலியானார்கள்.

இதன் மூலம் மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 40 ஆகவும், புனேயில் 8 ஆகவும் அதிகரித்தது. மாநில அளவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதே போன்று மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிராவில்தான் கொரோனாவுக்கு அதிகம் பேர் இறந்துள்ளனர்.

Related Stories: