தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா : சென்னையில் ஒரு பெண் பலி

சென்னை: தமிழகத்தில் நேற்று 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 வயது பெண் உயிர் இழந்துவிட்டார். இதன்படி பாதிப்பு எண்ணிக்கை 690 ஆகவும், பலி எண்ணிக்கை 7 ஆகவும் உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 66,431. அரசு கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 253. 28 நாள் கண்காணிப்பு முடித்தவர்கள் 27,416. நேற்றுமுன்தினம் வரை (ஏப். 6) பாதிக்கப்பட்டவர்கள் 621. நேற்று (ஏப்.7 ) புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் 69. இதில் 43 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள். 3 பேர் ஒரே குடும்பத்தைச் ேசர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் வெளிநாடு பயணம் செய்தவர்கள். இதில் 64 வயது பெண் உயிர் இழந்துவிட்டார்.

இவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ெடல்லி மாநாடு சென்று வந்த 63 பேருக்கு நேற்று (ஏப்.7) கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து டெல்லி மாநாடு சென்று வந்த 637 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மாநாடு சென்று வந்த 1,630 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 633 பேரும் கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 961 பேருக்கு பாதிப்பு இல்லை என்று  தெரியவந்துள்ளது. மேலும் பலர் வந்து கொண்டு உள்ளார்கள்.  இவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட 33 மாவட்டங்களில் 15 லட்சம் வீடுகளில் உள்ள 53 லட்சம் பொதுமக்கள் சோதனை  செய்யப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள்  பணியாற்றிவருகின்றனர்.  புதிதாக 2 பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஒன்று ஈரோட்டில் உள்ள ஐஆர்டி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று தனியார் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசிடம் 14 ஆயிரம் சோதனை கருவிகள் உள்ளது. இவை அனைத்தும் புனேவில் இருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மரணம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து இறப்புகளுக்கான காரணங்களும் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் அளிப்பது,   இறுதி மரியாதை அளிப்பது, அடக்கம் செய்வது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.    வெளிநாடு சென்று வந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையம் தவிர்த்து வேறு ஏதாவது விமான நிலையம் வழியாக தமிழகம் வந்தது தொடர்பான தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. ேரபிட் பரிசோதனை கருவி மூலம் எப்படி பரிசோதனை செய்வது என்பது தொடர்பாக கானொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி பாதிக்கப்பட்ட வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளை எப்படி கண்டறிவது என்பது தொடர்பாக ஜிஐஎஸ் மூலம் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடுத்தபடியாக கோவையில் 60 பேரும், திண்டுக்கலில் 45 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: