×

டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து சப்ளை: ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை தர பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை தருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, ஏற்றுமதிக்கு விதித்த தடையை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அங்கு பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த வைரசை கட்டுப்படுத்த மலேரியாவுக்கு தரப்படும் பழங்கால, அதிக செலவில்லாத ஹைடிராக்சி குளோரோகுயின் மாத்திரை நல்ல பலன் தருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். உலகின் பல நாடுகள் இம்மருந்தை பரித்துரைத்துள்ளன. இந்திய மருத்துவ சங்கமும் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை பரிந்துரை செய்துள்ளது.

உலகிலேயே இம்மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்கத் தொடங்கியதும், மருந்து இருப்பை உறுதிபடுத்த ஹைட்ராக்சி குளோரோகுயின், பாராசிட்டமால் உள்ளிட்ட 14 வகையான மருந்துகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி தடை விதித்தது. இதனால், அமெரிக்கா, ஸ்பெயின், இலங்கை உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டன. ஏற்றுமதிக்கு தடை விதித்ததை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தின.
இந்தியாவின் ஏற்றுமதியில் 47 சதவீதம் அமெரிக்காவுக்கு தான் செல்கிறது. இந்த மருந்தை பொறுத்த வரையில் அமெரிக்கா, இந்தியாவையே அதிகம் நம்பி உள்ளது. இதனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த ஞாயிறன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, ஏற்கனவே ஆர்டர் செய்த அளவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை தர வேண்டுமென  வலியுறுத்தினார்.  

இதைத்தொடர்ந்து ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வந்த நிலையில், நேற்றுமுன்தினம் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ‘‘ஹைட்ட்ராக்சி குளோரோகுயின் மருந்து வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளேன். இந்தியாவுடன் நல்ல நட்புறவு நிலவுவதால், அவர் தராமல் இருந்ததால்தான் ஆச்சரியப்படுவேன். அதே சமயம் அவர் மருந்தை தர மறுத்தாலும் பரவாயில்லை. அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடலாம்,’ என பகிரங்கமாகவே மிரட்டினார். இந்த மிரட்டலைத் தொடர்ந்து, தற்போது மத்திய அரசு பணிந்துள்ளது. டிரம்ப் மிரட்டலால் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை வழங்குவதற்கான தடையை தளர்த்தி உள்ளது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் வஸ்தவா நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா எப்போது சர்வதேச நாடுகளுடன் நல்லிணக்கத்தையும், கூட்டு ஒத்துழைப்பையும் பராமரித்து வருகிறது. அந்த வகையில் மனிதநேய அடிப்படையில் பாராசிட்டமால், ஹைட்ராக்சி குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தடை தளர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் இந்திய மக்களுக்கு தேவையான மருந்து கைவசம் இருப்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். உள்நாட்டு தேவை குறித்து ஆய்வு செய்த பின்னரே தடை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். படிப்படியாக தடை விலக்கப்படும்,’’ என்றார்.

இந்த விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு இந்தியா பணிந்து விட்டதாக சர்வதேச நாடுகள் கூறி வருகின்றன. இதனால், இது சர்ச்சையாகி உள்ளது.
அதே சமயம், மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை தடுக்க முடியுமா? என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த மருந்தால் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என எந்த மருத்துவ ஆய்வும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வம்சாவளியினர் அதிகளவில் பாதிப்பு:
அமெரிக்காவில் கொரோனாவால் நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தான் அதிகளவிலான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். இங்கு மட்டுமே ஒரு லட்சத்து 70 ஆயிரம்  பேருக்கு கொரோனா  பாதிப்பு உள்ளது.  5,700க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். இவர்களில் இந்திய வம்சாவளியினரும் அடங்குவர். ஆனால், பாதிக்கப்பட்ட மற்றும் இறந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை பற்றி துல்லியமான தகவல் வெளியாகவில்லை.

அமெரிக்காவில் 11,000 பேர் பலி:
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,255 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 11,008 ஆக இருந்தது. 3 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,800 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  நாட்டில் 90 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதற்கிடையே, டிரம்ப் அரசு எடுத்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா பலி அதிகபட்சம் 1 லட்சமாகவே இருக்கும் என வெள்ளைமாளிகை விரைவு செயற்குழு புதிய அறிக்கை சமர்பித்துள்ளது.  ஏற்கனவே இக்குழு அளித்த அறிக்கையில் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை பலியாகக் கூடும் என கூறியிருந்தது.

எப்படி உருவானது ஹைட்ராக்சி குளோரோகுயின்?
சின்கோனா மரங்களில் காய்ச்சலை குணப்படுத்தும் குயினைன் என்ற பொருள் இருப்பது 17ம் நூற்றாண்டில்தான் முதல் முறையாக தெரியவந்தது. இதன் தொடர் விளைவாக 20ம் நூற்றாண்டில் மூலக்கூறில் இருந்து குளோரோகுயின் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது காய்ச்சல், மூட்டுவலி, உடல்வலி உள்ளிட்டவற்றையும் சரி செய்வதாக இருந்தது. இதில் இருந்து மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் வீரர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய மலேரியா இதன் மூலம்தான் கட்டுப்படுத்தப்பட்டது.

இல்லாவிட்டால் ஏராளமான வீரர்கள் உயிரிழந்திருப்பார்கள். அவ்வளவு பழைய இந்த மருந்து இன்றும் மலேரியாவுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது தற்போது கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் நல்ல நிவாரணம் அளிப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் இதுதான் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகிறது. இதனால்தான் அதை கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

ஜப்பானில் அவசரநிலை
சீனாவைத் தொடர்ந்து ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவினாலும், அதன் தீவிரம் தற்போதுதான் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதுவரை சுமார் 4 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் பலியாகி உள்ளனர். டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 7 முக்கிய மாகாணங்களில் நோய் தொற்று பரவி இருக்கிறது. இதனால், டோக்கியோ உள்ளிட்ட நோய் தொற்றுள்ள மாகாணங்களில் தேசிய அவசரநிலையை பிரதமர் ஷின்சோ அபே நேற்று பிரகடனப்படுத்தினார். நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த அவசரநிலை ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆனாலும், அடிப்படை பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து நடக்கும் என்றும், கடைகள், ஷாப்பிங் மால்கள் திறந்திருக்கும் என கூறப்படுகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வர வேண்டாம், பொதுஇடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

உலகளவிலான பலி எண்ணிக்கை 76,000:
உலக முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மாலை நிலவரப்படி மொத்த பலி எண்ணிக்கை 76,123 ஆக இருந்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 510 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களாக ஸ்பெயினில் பலி எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்தது. ஒரே நாளில் அங்கு 743 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 13,798 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 16,523 பேர் இறந்துள்ளனர். பிரான்சில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 833 பேர் இறந்தனர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 8,911 ஆகி உள்ளது.

பாதுகாப்பு கவுன்சில்  நாளை கூடுகிறது:
கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76,000 பேர் பலியாகி உள்ள நிலையில், இவ்விவகாரம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுவரை விவாதிக்கப்படவில்லை. அதற்கு காரணம், கடந்த மாதம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை சீனா வகித்ததே என உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில், இம்மாதத்திற்கான ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொறுப்பை கரீபியன் தீவான டொமினிகன் குடியரசு ஏற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொடர்பாக ஆலோசிக்க பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் முதல் முறையாக நாளை கூட்டப்படுவதாக அறிவித்துள்ளது.

வீடியோ கான்பரன்சிங் மூலம் நடக்கும் இக்கூட்டத்தில் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டனியோ கட்டரசும் பங்கேற்பார். அமெரிக்கா உள்ளிட்ட 15 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் சீனாவுக்கு நெருக்கடி தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : India ,US ,Trump , Trump, USA, India, Drug Supply
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...