கொரோனா வைரசால் உடல்நிலை மோசமானது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

லண்டன்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட உலக தலைவர்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் (வயது 55) ஒருவர். கடந்த 12 நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்று முதல் வீட்டிலிருந்தபடியே தனிமைப்படுத்தப்பட்டு, அரசாங்கப் பணிகளை கவனித்து வந்தார். கர்ப்பமாக உள்ள அவரது வருங்கால மனைவி கேரி சைமண்ட்சுக்கு நோய் அறிகுறி இல்லாவிட்டாலும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், கடந்த ஞாயிறு இரவு வழக்கமான பரிசோதனைக்காக, கொரோனா சிறப்பு சிகிச்சை மையமான தேசிய சுகாதார மையத்திற்கு போரிஸ் ஜான்சன் அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் இது வழக்கமான பரிசோதனைதான் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் போரிசுக்கு அதிக காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமாக இருப்பதால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.இதன்படி தற்போது ஐசியு வார்டில் போரிஸ் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்நாட்டு அமைச்சரவை அலுவலக அமைச்சர் மைக்கேல் கோவ் கூறுகையில், ‘‘பிரதமர் போரிசுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்படவில்லை.

செயற்கை சுவாசம் தேவைப்படுவதால் ஆக்சிஜன் பொருத்த வேண்டிய காரணத்திற்காக அவர் ஐசியு.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார். போரிஸ் மருத்துவமனையில் இருப்பதால், அவரது பணிகளை வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராப் கூறுகையில், ‘‘ திறமையான மருத்துவர்கள் கண்காணிப்பில் பிரதமர் பத்திரமாக உள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி இங்கிலாந்து அரசு செயல்படும்’’ என்றார். பிரதமர் போரிஸ் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்வதாக எதிர்க்கட்சி தலைவர்களும், சக அமைச்சர்களும் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘விரைவில் நீங்கள் மருத்துவமனையில் இருந்து திரும்பி பூரண குணமடைவீர்கள் என நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.

Related Stories: