கொரோனாவால் ஏற்பட்ட சோகம்: பல ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆர்டர் ரத்து: ஏற்றுமதி துறையினர் பரிதவிப்பு

* பாதிப்பு நீடிக்கும் என அச்சம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக, வெளிநாடுகளில்  பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். ஒட்டு மொத்த அளவில் சுமார் 20 ஏற்றுமதி ஆர்டர்களும், சில துறைகளில் 50 சதவீத ஏற்றுமதி ஆர்டர்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா வைரசால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் முடங்கியுள்ளன. பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான திட்டங்களை வரையறுப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் குழுவுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

 இருப்பினும், இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மேற்காசிய நாடுகளில் இருந்து ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் அதிக அளவில் வந்திருந்தன. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்த நாடுகளில் பாதிப்பு கடும் தீவிரமாக உள்ளது. இதைத் தொடர்ந்து, இந்திய நிறுவனங்களில் செய்திருந்த ஆர்டர்களை அந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் ரத்து செய்து விட்டன.  மேற்கண்ட நாடுகளில்  ஒட்டுமொத்த அளவில் இந்திய ஏற்றுமதி துறை சார்ந்த ஆர்டர்கள் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால், வரவேண்டிய ரீபண்ட்டும் நின்று விட்டது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் ஜூன் மாதம் வரை இல்லை என்றே கூறலாம். ஏனெனில், இப்போதுள்ள சூழ்நிலையில் விரைவில் மீளும் என்பதற்கான நம்பிக்கை ஏற்படவில்லை.

 ஜவுளித்துறை, கைவினை பொருட்கள், கார்பெட், ஆயத்த ஆடை ஏற்றுமதிகளை பொறுத்தவரை, சுமார் 50 சதவீதம் வரையிலான ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன.  ஆடைகள் ஏற்றுமதியை பொறுத்தவரை சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் ரத்தாகியுள்ளன.10,000 கோடி முடங்கியுள்ளது என ஏற்றுமதியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், உணவு மற்றும் வேளாண் பொருட்களுக்கு தேவை அதிகம் உள்ளது.  ஆனால், அவற்றை அனுப்புவதற்கு தேவையான கன்டெய்னர்கள், பேக்கிங் செய்வதற்கான பொருட்கள், இயந்திரங்கள் போதுமானதாக இல்லை. அதோடு, ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பக்கூடிய சில உணவு பொருட்களுக்கு தரச்சான்று வாங்க வேண்டியுள்ளது. எனவே, வாய்ப்பு இருந்தும் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கான சாத்தியம் இல்லை என ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தரப்பில் கூறப்படுகிறது.

 நவரத்தினங்கள் மற்றும் ஆபரண மேம்பாட்டு கவுன்சில் ஆய்வில், கடந்த மார்ச் மாதத்துக்கான ஏற்றுமதி 12 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடந்த 2019-20 நிதியாண்டில் 270 கோடி டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனவே, ஏற்றுமதியை ஊக்குவிக்க வட்டியில்லா கடன்வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இன்ஜினியரிங் பொருட்களுக்கு கூடுதலாக 3 முதல் 5 சதவீத சலுகை அளிக்க வேண்டும், இதுபோல் குறு, சிறு நடுத்தர தொழில்கள், ஜவுளித்துறை, ஆபரண துறையினருக்கு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: