பாதிப்பு பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளும் தூய்மை தொழிலாளர்களுக்கு பணமாலை அணிவித்து கைதட்டி பாராட்டு

திருமலை: ஆந்திராவில் கொரோனா பாதித்த பகுதிகளில் பணிகளை மேற்கொள்ளும் தூய்மை தொழிலாளர்களுக்கு பொதுமக்கள் பணமாலை அணிவித்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். ஆந்திராவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 304ஆக உயர்ந்துள்ள நிலையில் சித்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பலமநேரில் 3 பேருக்கு  இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பகுதிகளில் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்து கிருமி நாசினிகளை கொண்டு சுத்திகரிக்கும் பணியும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியே வராத வகையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும்  நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  உயிர்க்கொல்லி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தும் அந்த பகுதிகளில் தங்கள் உயிரை பணயம் வைத்து  தூய்மை  பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களை பாராட்டும் விதமாக பலமநேர் பெரிய மசூதி தெருவை சேர்ந்த, வழக்கறிஞர் ஹாரூனின் மகன்கள் பியாஜ், பைரோஸ் ஆகியோர் நேற்று துப்புரவு பணியில் ஈடுபட வந்த ஊழியர்கள் 2 பேருக்கு 15, 100 ரூபாய் நோட்டில் மாலை தயாரித்து அதை சால்வையுடன் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீட்டிலிருந்தபடி கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இதுகுறித்து பலமநேர் நகராட்சி ஆணையாளர் விஜயசிம்மா கூறுகையில், `பெரிய மசூதி தெருவில் உள்ளவர்களின் இந்த செயலை பாராட்டுகிறேன். இதுபோன்று செய்வது துப்புரவு தொழிலாளர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும் என்றார்.

Related Stories: