இங்கிலாந்தில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால் இங்கிலாந்தில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால், அந்நாட்டில் படிப்பதற்காக சென்றுள்ள இந்திய மாணவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை இந்தியாவுக்கு மீட்டு வரக்கோரி டெல்லியை சேர்ந்த வக்கீல் மதுரிமா மிருதுல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுதாக்கல் செய்துள்ளார். இதில், `இந்தியாவில் உள்ள இங்கிலாந்து நாட்டினரை அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்ப பயன்படுத்தப்படும் விமானங்களில், இந்திய மாணவர்களை மீட்டு வரவேண்டும். இது தொடர்பாக ஏற்கனவே இங்கிலாந்து, ஜெர்மனி அரசுகள் மத்திய அரசை தொடர்பு கொண்டுள்ளன.

இதற்காக, மும்பை மற்றும் டெல்லியில் இரு ந்து விமானங்களை இயக்கலாம் எனவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன,’ என கூறப்பட்டுள்ளது. மற்றொரு வக்கீல் ஆஷ்தா சர்மா தாக்கல் செய்திருந்த மனுவில், `இந்தியா மட்டும் தான் இந்த இக்கட்டான நிலையில் தனது சொந்த குடிமக்களை வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வர தடை விதித்துள்ளது,’ என கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.  மற்றொரு வழக்கு: இதே அமர்வு முன் மனித உரிமைகள் நல ஆர்வலர்கள் மான்டேர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் மற்றொரு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதில் `ஊரடங்கு உத்தரவால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்க வேண்டும். வேலையில்லாத இந்த நேரத்தில் அவர்களுக்கு உணவு மற்றும் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்,’ என  கூறப்பட்டுள்ளது. அந்த மனுவும் தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், உதவி தேவைப்படுவோருக்கு ஹெல்ப் லைன் தொடங்க உத்தரவிட்டு வழக்கை  13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: