பக்தர்கள் வராததால் செட்டிக்குளம் கோயிலில் உணவு கிடைக்காமல் தவிக்கும் குரங்குகள்

பாடாலூர்: செட்டிக்குளம் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வராததால், அங்குள்ள குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த சில நாட்களாக கோயில் பூட்டப்பட்டுள்ளது. பூஜைகள் மட்டும் வழக்கமாக நடந்து வருகிறது. மேலும் இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.  தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் நேற்று விழா எதுவும் நடைபெறாததால், பக்தர்கள் கூட்டமின்றி கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த கோயிலில் 60க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைக்காரர்கள் அளிக்கும் உணவு பொருட்களை தின்று வந்தன. இப்போது கோயிலுக்கு பக்தர்கள் வராததால், குரங்குகள் உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றன. இதையறிந்த கோயில் நிர்வாகம், நேற்று அரிசி சாதம் சமைத்து குரங்குகளுக்கு வழங்கியது. குரங்குகள் ஒரே கூட்டமாக சேர்ந்து இந்த உணவை ருசித்தன. நேற்று மட்டும் தான் கோயில் நிர்வாகம் குரங்குகளுக்கு உணவு வைத்தாக கூறப்படுகிறது. தினமும் உணவு வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: