கள்ள மார்க்கெட்டில் விற்பனை ஜோர்; ரூ500க்கு எகிறியது குவார்ட்டர்: குடிமகன்கள் திண்டாட்டம்

திருச்சி: திருச்சியில் பல இடங்களில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. ஆனால் ரூ.110க்கு விற்கப்பட்ட குவார்ட்டர் 500க்கு எகிறி உள்ளதால், குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த 2 வாரமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மளிகை பொருட்கள், காய்கறி, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் 15 நாட்களாக மூடிக்கிடக்கின்றன. இதனால் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். மதுக்கடைகளை உடைத்து சரக்குகளை அள்ளிச்ெசல்லும் நிலை உருவாகி உள்ளது.

திருச்சி உறையூர், வரகனேரியில் ஏற்கனவே மதுக்கடைகளை உடைத்து திருட்டு நடந்துள்ளது. இதனால் திருச்சியில் பாதுகாப்பாற்ற இடங்களில் இருந்த சரக்குகள், தேவர் ஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் திருமண மண்டபங்களுக்கு சரக்குகள் மாற்றப்பட்டுள்ளன.  இப்படி ஒரு நிலை உருவாகும் என முன்பே கணித்த பலர், ஏராளமான சரக்குகளை வாங்கி பதுக்கி வைத்து, இப்போது அதிக விலைக்கு விற்று வருகின்றனர். கடந்த வாரத்தில் ரூ.110க்கு விற்கப்படும் குவார்ட்டர் ரூ.250க்கும், ரூ.125க்கு விற்கப்படும் குவார்ட்டர் ரூ.275க்கும் விற்கப்பட்டது. ஆனால் நேற்றைய நிலவரப்படி ரூ.110 குவார்ட்டர் ரூ.450க்கும், ரூ.125 குவார்ட்டர் ரூ.500க்கும் விற்கப்பட்டது.

இப்படி தாறுமாறாக விலை உயர்ந்திருப்பது தான், குடிமகன்களை திண்டாட வைத்துள்ளது. திருச்சியை பொறுத்தவரை ராம்ஜிநகர், உறையூர், கே.கே.நகர், திருவெறும்பூர் பகுதிகளில் இந்த கள்ள மார்க்கெட் விற்பனை ஜோராக நடந்து வருகிறது. போலீசுக்கு தெரிந்தும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. கள்ள மார்க்கெட்டில் விற்பதற்காக வாங்கி பதுக்கி வைத்திருந்த சரக்குகள் எல்லாம் தீர்ந்து விட்டது. அப்படி இருந்தும் சரக்குகள் எப்படி கிடைக்கிறது. ஒரு சில டாஸ்மாக் கடைகளின் சூபர்வைசர்கள் இரவு நேரத்தில் கடைகளை திறந்து சரக்குகளை எடுத்து விற்பனைக்கு கொடுக்கின்றனர்.

அதுதான் தங்கு தடையின்றி சரக்குகள் கிடைக்க காரணம் என்றும் கூறப்படுகிறது. அரசு அறிவித்தபடி இன்னும் ஒரு வாரத்தில் ஊரடங்கு விலக்கிக்ெகாள்ளப்பட்டால், பரவாயில்லை. நீட்டிக்கப்பட்டால், அவ்வளவுதான் என குடிமகன்கள் இப்போதே புலம்ப துவங்கி விட்டனர்.

Related Stories: