டாஸ்மாக் கடைகளை பாதுகாக்க வழியில்லை: குடோனுக்கு அள்ளி செல்லப்படும் சரக்குகள்

தேனி: தேனி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை உடைத்து மது பாட்டில்களை குடிமகன்கள் திருட வாய்ப்பு உள்ளதால், கடைகளில் இருந்த சரக்குகளும் குடோனுக்கு அள்ளி சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க ஏப்.14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் சரக்குகள் கிடைக்காததால் சில இடங்களில் குடிமகன்கள் மாற்று போதை மருந்துகளை பயன்படுத்தி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள சில டாஸ்மாக் கடைகளில் திருட்டு முயற்சிகள் நடந்துள்ளன.

டாஸ்மாக் கடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இந்த இக்கட்டான நேரத்தில் போலீசாருக்கு இருக்கும் பணிச்சுமையில் டாஸ்மாக் கடைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளை எச்சரித்தனர். டாஸ்மாக் கடைகளில் சரக்குகளை இருப்பு வைத்துக் கொண்டு பாதுகாக்க முடியாது என்பதால், வேறு வழியின்றி டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த சரக்குகளை லாரிகளில் ஏற்றி குடோனுக்கு கொண்டு சென்று பத்திரப்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் டாஸ்மாக் கடைகள் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் தவிர்க்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: