கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் கடந்த ஒருவாரமாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவும் மாநிலங்களில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கு இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதுமே அத்தியாவசியப் பணிகளைத் தாண்டி வேறு எந்தவொரு பணியும் நடக்கவில்லை.

படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே கொரானா தொற்றை தடுக்க, நிவாரண பணிகளுக்கு  செலவிட நிதி திரட்டும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. பிரதமர் பாதுகாப்பு நிதி, மாநில முதல் அமைச்சர் நிவாரண நிதி என்ற பெயரில்  நிதி திரட்டப்படுகின்றன. அதன் அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்கள், நடிகர்கள், என பல்வேறு பரபலன்கள் முதலமைச்சர், பிரதமர் நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள்.

தமிழ் திரையுலகப் பிரபலங்களில் சிவகார்த்திகேயன் மட்டுமே முதல்வர் நிவாரண நிதி மற்றும் ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு என இரண்டுக்குமே நிதியுதவி வழங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழ் திரையுலகில் முதல் நடிகராக, பிரதமர் நிவாரண நிதி, முதல்வர் நிவாரண நிதி மற்றும் ஃபெஃப்சி என அனைத்துக்குமே நடிகர் அஜித்குமார் நிதியுதவி வழங்கியுள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஃபெஃப்சி தொழிலாளர்கள் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

Related Stories: