ஊரடங்கால் பங்குனி உத்திர திருவிழா ரத்து பழநி, திருப்பரங்குன்றம் வெறிச்சோடியது

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முதன்மை திருவிழா பங்குனி உத்திரம். இவ்விழாவில் ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து பழநி முருகனுக்கு அபிஷேம் செய்வது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா கடந்த 31ம் தேதி துவங்கி இருக்க வேண்டும். முக்கிய நிகழ்ச்சியான  பங்குனி உத்திரத் தேரோட்டம் நேற்று நடந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கடந்த மார்ச் 19ம் தேதி முதல் பழநி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பழநி கோயிலில் நடைபெற வேண்டிய பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது. பங்குனி உத்திர தேரோட்ட நாளான நேற்று பழநி நகர சாலைகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பழநி கோயில் வரலாற்றிலேயே பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.

திருப்பரங்குன்றம் :மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கொரானா தடுப்பு நடவடிக்கையாக இங்கும் திருவிழா ரத்து செய்யப்பட்டது. பங்குனி உத்திர நாளான நேற்று யாரும் கிரிவலம் செல்ல வராததால், வழக்கமாக பரபரப்புடன் பக்தர்கள் கூட்டத்துடன் காணப்படும் திருப்பரங்குன்றம் சன்னதி தெரு, கோயில் வாசல், கிரிவல பாதை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: