ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மக்களின் சிரமங்களை தவிர்க்க வாபஸ் பெறப்படுமா?.. மத்திய அரசு ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, மார்ச் 25ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தபடுத்தப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு பநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது மக்களின் சிரமங்களை தவிர்க்க வாபஸ் பெறப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில் இந்தியாவை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு என்பது 4,917-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 137 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த பரவலை முற்றிலுமாக தடுக்க வேண்டும் எனில் இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் இதனை எவ்வாறு நீடிப்பது என்பது குறித்து தான் இன்று மத்திய அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீட்டில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், உள்ளிட்டோர் பங்கேற்று ஊரடங்கை எப்படி நீடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதற்கிடையில் இந்த ஊரடங்கு தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஒருசில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறது. 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால் அன்றைய தினத்தில் இருந்து 5 நாட்கள் இடைவெளி கொடுத்துவிட்டு மீண்டும் 21 நாட்கள் வரை ஊரடங்கை அமல்படுத்தலாம் என்பது உலக சுகாதாரா நிறுவனத்தின் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் சில மாறுபட்ட கருத்து காணப்படுகிறது. இடைவெளி விடக்கூடாது தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பரவலாக கருத்து நீடித்து வருகிறது. இது தொடர்பாக மாநில அரசுகள் அமைத்துள்ள உயர்மட்ட குழுவினர் கூடி ஆலோசனை நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் படி கூறியிருந்தனர்.

இதில் இதுவரை 7 மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த 21 நாள் ஊரடங்கை இன்னும் 2 வாரம் முதல், 2 மாதம் வரை நீட்டிக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் இன்னும் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நாளை பிரதமர் மோடி அனைத்துக்கட்சி தலைவர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது இந்த ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக என்பது குறித்து ஆலோசனை நடத்தி பல்வேறு முடிவுகள் எடுக்க்கப்படலாம் என கூறப்படுகிறது.  

இந்நிலையில் நாடு முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கை நீட்டிக்குமாறு மராட்டியம், தெலுங்கானா, உத்திரப்பிரதேசம்ம் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் நீட்டிப்பு செய்ய ஆதரவு தெரிவித்துள்ளன. பல்வேறு துறைசார் நிபுணர்களும் ஊரடங்கை நீட்டிக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து தரப்பு கருத்துக்கள் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: